இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம்...... பெட்ரோலுக்கு நிகர் காஷ்மீரில் “புதையல்”....!

 

இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம்...... பெட்ரோலுக்கு நிகர் காஷ்மீரில் “புதையல்”....!

உலகில் தற்போது அதிகளவில் தேவைப்படும் படிமங்களில் ஒன்றான லித்தியம் காஷ்மீரில் பெருமளவில் பூமிக்கு அடியில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்தியாவின் எதிர்காலத்தையே பெரும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். லித்தியம் படிமம் என்றால் என்ன? அதனால், இந்தியா எப்படி வளர்ச்சியடையும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரின் மாவட்டம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் - ஹைமானா பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது உலகிற்கே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்ட புவியியல் ஆய்வின்போது பல மாநிலங்களில் தங்கம் உள்ளிட்ட 51 கனிம தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுவரை வெளிநாடுகளில் இருந்தே பெரும் தொகை கொடுத்து இந்தியா லித்தியத்தை இறக்குமதி செய்து வந்திருக்கிறது. இந்த நிலையில் லித்தியம் வைத்திருக்கும் நாடுகளின் வரிசையில் 2 வது இடத்தை பிடித்து இருக்கிறது இந்தியா. முதலிடத்தில் உள்ள சிலியில் 92 லட்சம் டன் லித்தியம் உள்ளது.

அப்படி எதற்கு இந்த லித்தியம் பயன்படுகிறது என்று யோசிக்கலாம். உங்கள் செல்போனின் பேட்டரியை கழற்றி பார்த்தால் அதில் லித்தியம் - அயன் பேட்டரி என்று எழுதி இருக்கும். இப்போது புரிகிறதா லித்தியம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று. ரீசார்ஜ் செய்யப்படும் பேட்டரிகளை உற்பத்தி செய்ய லித்தியம் பயன்படுகிறது. கார்பன் மூலக்கூறுகளை கொண்ட கிராபைட் வகை படிமம்தான் இந்த லித்தியம்.

இது பேட்டரியில் எதிர்மறை மின்முனை (Negative electrode) ஆகவும், மெட்டல் ஆக்சைட் நேர்மறை மின்முனை (Positive electrode) ஆகவும் லித்தியம் உப்பு மின்பகுபொருளாகவும் செயல்படும். ரீசார்ஜ் செய்யப்படும்போது லித்தியம் அயான் அணுக்கள் நகர்ந்து சார்ஜ் ஆகும். பேட்டரிக்களில் திரவங்களின் பயன்பாட்டை பெருமளவில் குறைப்பதால் இதன் எடை, அளவும் குறைந்து, ஆயுட் காலம் நீடிக்கிறது.

இதன் காரணம் லித்தியம் அயன் பேட்டரியை செல்போன், லேப்டாப், டேப் போன்றவற்றில் பேட்டரிக்களாக பயன்படுத்துகின்றன. தற்போதைய சூழலில் உலகில் அதிகளவில் தேவைப்படும் கனிமமாக லித்தியம் உள்ளது. காரணம், தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களிலும் லித்தியம் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றனர்.

எலெக்ட்ரிக் கார், பைக் பயன்பாடு அதிகரித்த பிறகு பெரிய பேட்டரிக்களை தயாரிக்க அதிகளவில் லித்தியம் பயன்படுத்தப்பட்டதால் அதற்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்தே அதிகளவில் லித்தியம் இறக்குமதி செய்யப்பட்டதால் சுங்க வரிகளுடன் சேர்த்து அதிக விலை கொடுத்து லித்தியத்தை வாங்கி பேட்டரிகளை இந்திய எலெக்டிரானிக் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வந்தன.

இந்த காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் விலை கணிசமான அளவு குறைவதுடன், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன், லேப்டாப், மின்சார கார்கள், பைக்குகள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் கார், பைக்குகளின் விலையில் அதன் பேட்டரிகளுக்கான செலவே பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்த பேட்டரிகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட வேண்டும் என்பதால் அடுத்த 2, 3 ஆண்டுகளில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், எரிபொருளுக்கு இணையான முக்கியத்துவத்தை லித்தியமும் பெறும் என்று நம்பப்படுகிறது

பெட்ரோல், டீசலை கொண்டு ஓடும் வாகனங்கள், இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகே ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஈரான் போன்ற அரபு நாடுகள், ரஷியா உள்ளிட்ட நாடுகள் செல்வம் கொழிக்கும் நாடுகளாகவும் அதிகாரம் படைத்த நாடுகளாகவும் உலகளவில் உருவெடுத்தன.

எண்ணெய்யை வைத்துள்ள நாடுகளின் பொருளாதாரம் எப்படி செழித்ததோ அதேபோல் லித்தியத்தை வைத்திருக்கும் நாடும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் லித்தியம் படிமத்தை வெட்டி எடுக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல் மத்திய அரசே ஏற்று நடத்தினால் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது பெரும் பங்காற்றும் என்று நம்பப்படுகிறது.