2021 - 22 ஆம் கல்வி ஆண்டிற்கான RTE கல்வி கட்டண பாக்கி விரைவில் கிடைக்கும்.....!!

 2021 - 22 ஆம் கல்வி ஆண்டிற்கான RTE  கல்வி கட்டண    பாக்கி விரைவில் கிடைக்கும்.....!!

2021 - 22 ஆம் கல்வி ஆண்டிற்கான RTE  கல்வி கட்டண    பாக்கியை  விடுவிப்பதற்கான பணிகளை  மெட்ரிகுலேஷன்  பள்ளிகள் இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது.

  இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தனியார் பள்ளிகள் தங்களின் வங்கிக் கணக்கை EMIS  இணையதளத்தில் சரி பார்க்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. 

EMIS இணையதளத்தில்  சரியாக உள்ள வங்கி கணக்கிற்கு மட்டுமே பணம் செலுத்த உள்ளதால் இதை சரி பார்க்காத பள்ளிகள் உடனடியாக சரிபார்த்து பதிவேற்றம் செய்யவும்.  மார்ச் மாதம் முதல் வாரத்தில் உங்களுக்கான பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் இதற்கான கட்டணத்தை ஜனவரி முதல் மே மாதத்திற்குள் வழங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இந்த கட்டணத்தை விடுவிப்பதில் தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது.

 இந்த மெத்தென போக்கை கண்டித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக கடந்த ஆண்டுகளில் இதற்கான கட்டணம் விடுவிக்கப்பட்டது.

 அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அந்தந்த ஆண்டுக்கான கட்டணத்தை அந்த ஆண்டிலேயே மூன்று பகுதிகளாக பிரித்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆனால் தமிழக அரசு இந்த உத்தரவை மதிக்காமல் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகளுக்கு தர வேண்டிய கட்டணத்தை தராமல் இழுத்தடித்து வருகின்றது.

இதை கண்டித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பாக பிப்ரவரி 27ஆம் தேதி டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. 

 இது தொடர்பான மனுவை தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இயக்குனர் பெருமக்களுக்கு மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை அடுத்த 2023 -24 ஆம் கல்வி ஆண்டுக்கான RTE மாணவர் சேர்க்கை துவங்க உள்ள நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை விடுவிக்க நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகளின் நெஞ்சில் பால் வார்ப்பதாக உள்ளது.