உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி கல்குவாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

 உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி கல்குவாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

*ஓசூர் அருகே உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி கல்குவாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம் : 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு*

ஓசூர் அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தின் வழியாக டிப்பர் லாரிகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள பஞ்சாட்சிபுரம் கிராமத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டகிரி கிராமத்தில் இயங்கி வரும் 6 கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகள் சென்று வருவதை கிராம மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இது சம்பந்தமாக கல்குவாரி உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியான இந்த தீர்ப்பையடுத்து மாவட்ட நிர்வாகம் கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகளை இயக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகள் இயக்கப்படாததால் கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கொரட்டகிரி கிராமத்தின் வழியாக கல்குவாரிகளுக்கு டிப்பர் லாரிகளை இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஓட்டுநர்கள் பங்கேற்றுள்ளனர். 500க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. மேலும் தங்களது பிரச்சனை தீரும் வரை கல்குவாரிகளை இயக்க மாட்டோம் என கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.