அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணக்கே தெரியல.. மாணவர்கள் பெயரை வெளியிட்ட தருமபுரி ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணக்கே தெரியல.. மாணவர்கள் பெயரை வெளியிட்ட தருமபுரி ஆட்சியர்!

அரசுப் பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதி வந்த மாணவர்களுக்கு அடிப்படை கணக்கே தெரியவில்லை என்றும், ஆசிரியர் கரும்பலகையில் விடைகளை எழுதியதாகவும் மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் காலாண்டு பருவத் தேர்வுகள் ஒன்றாம் வகுப்பு தொடங்கி 12 ஆம் ஆம் வகுப்பு வரை நடைபெற்றது. . கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வுகளை 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விறுவிறுப்பாக காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், பல பள்ளிகள் வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த வகையில் நேற்று தருமபுரி மாவட்டம் பிக்கனஅள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவர்களிடம் வினாதாளில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியவில்லை என 3 மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆட்சியர் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், 'தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட்சியில்  (28.09.2022) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது கண்டறியப்பட்ட பின்வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டியது.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட்சியில் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த பின்வரும் மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு காலாண்டுத் தேர்வு கணக்குத் தாள் தேர்வினை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாணவர்களை சந்தித்து தேர்வு குறித்து வினாத்தாளிலிருந்து கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதில் மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் அறிவு இல்லை என தெரிய வந்தது.

இவ்வாறான நிலையில், மாணவர்களிடம் எப்படி தேர்வு எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது, தொடர்புடைய ஆசிரியர் கரும்பலகையில் வினாவிற்கான பதிலை எழுதி வைத்ததாகவும், அதைப் பார்த்து தேர்வு எழுதி திரும்பியதாகவும் பதிலளித்தனர். மாணவர்களுக்கு கணிதத்தை முறையாக சொல்லிக் கொடுத்து, அவர்களின் கல்வி அறிவு மேம்பட இல்லம் தேடி கல்வி மையங்களில் சீரிய முறையில் கற்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.(அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றுமே ஒழுங்காக நடத்தப்படுவதில்லை என்பது மாவட்ட ஆட்சியருக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. அதனால்தான் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.)

இந்த கடிதத்தில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரின் பெயர்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சியர் எழுதிய கடிதத்தில் மாணவர்களின் பெயரை குறிப்பிட்டதற்கு ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.