மாணவர்களை கையாளும் விவகாரத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

மாணவர்களை கையாளும் விவகாரத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த துயர நிகழ்வு ஒன்று, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.

கோழிப்பண்ணைகளில் கறிக்காக கோழிகளை அடைத்து வைத்து வளர்ப்பது போல், வெறுமனே மதிப்பெண்களுக்காக மட்டும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மீது அவர்களது சக்திக்கு மீறிய பாரத்தை ஏற்றுவதால் எதிர்பாராத அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவதையோ கண்டிப்பதையோ தவறு என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அந்த கண்டிப்புக்கும் திட்டுக்கும் ஒரு வரைமுறை என்று இருக்கிறது. அதில் எல்லை மீறும் ஒரு சில ஆசிரியர்களால், குலக் கொழுந்துகளையே இழக்க வேண்டிய துயரத்துக்கு ஆளாகிறார்கள் பெற்றோர்கள்.

அப்படி ஒரு நிகழ்வு தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் நடந்துள்ளது. சக்தி இண்டர்நேஷன்ல் பள்ளியில் பயின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக தான் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று ஒரு பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது.

பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுமே நன்றாக படிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை முதலில் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மாற்றிக்கொள்ள வேண்டும். தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் செண்டம் மட்டுமே வாங்க வேண்டும் என நினைப்பது தான் தனியார் பள்ளிகள் செய்யும் தவறுகளில் முதன்மையானது. பாடங்களை மிரட்டி உருட்டி மாணவர்களை மணப்பாடம் செய்ய வைப்பது மட்டுமே தங்களின் தலையாய பணி என ஒரு சில ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளும் கருதுவதால் தான், இன்று கல்லூரிகளில் உயர்கல்வி படித்தும் சுய திறமையின்மையால் வேலை வாய்ப்பில்லாமல் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள் பல அரசு என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலையில் இயங்கிவருவதை காண முடிகிறது. சனி, ஞயிறுக்கிழமைகளில் மாணவ, மாணவிகள் ஒய்வெடுத்து புத்துணர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கமே இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள சூழலிலும், சனிகிழமைகளில் பள்ளிகளை நடத்தி ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பிஞ்சுக்களை கூட பள்ளிகளுக்கு வரவழைத்து தங்கள் கடமை உணர்வுக்கு ஒரு அளவேயில்லை என்பதை போல் நடந்து கொள்கின்றன பல தனியார் பள்ளிகள்.

மாணவர்களை அதிலும் குறிப்பாக மாணவிகளை மிரட்டி உருட்டி திட்டுவதை விட்டுவிட்டு அன்பாலும் கற்பிக்கும் முறையாலும் அவர்களை கையாள வேண்டுமே தவிர, வெறுமனே 'ஸ்டடி ஸ்டடி' என மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அடைத்து வைத்து, கோழிப்பண்ணைகளில் அடைத்து வைக்கப்படும் கறிக்கோழிகளை போல் நடத்தக்கூடாது. எல்லா மாணவர்களும் ஒரே மனநிலையில் இருக்கமாட்டார்கள் என்பது இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு சில மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள துணிந்தவர்களாக இருப்பார்கள், ஒரு சிலர் ஆசிரியர்கள் திட்டுவதை கூட தாங்கிக் கொள்ள முடியாத இளகிய மனம் உடையவர்களாக இருப்பார்கள்.

இதனால் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எந்த வார்த்தைகளை சொல்லி திட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட விவகாரங்களில் ஆசிரியர்கள் இனி கவனமுடன் இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு அவரது தாயார் தனி ஆளாக குரல் கொடுத்து வந்த நிலையில், இன்று மாணவர் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் களத்தில் குதித்து போராட்டத்தில் தொடங்கி கலவரத்தில் முடித்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், குறிப்பிட்ட ஒரு சில அதிமேதாவி ஆசிரியர்களும் செய்த தவறுகளால் இன்று பாதிப்பு அடைந்திருப்பது பலர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி காவலர்கள் பலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

பொறுப்பற்ற சிலரது தவறால் அது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் பள்ளி சம்பவம் ஒரு உதாரணம். இதனால் தனியார் பள்ளி நிர்வாகத்தினரும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் இனியாவது மாணவர்களை கையாளும் விவகாரத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.