கடை மட்ட தொண்டனையும் அரவணைக்கும் அ.தி.மு.க.: சபாஷ் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்....!

 கடை மட்ட  தொண்டனையும் அரவணைக்கும்  அ.தி.மு.க.:  சபாஷ் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்....!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

இதில் சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுவிட்ட நிலையில் அதிமுகவில் தொடர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்புக்கு இடையே இழுபறி நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத்தர இரு தலைவர்களும் போட்டியிட்டதால் வேட்பாளர்கள் தேர்வு தாமதமானதாக பேச்சு அடிபட்டது.


இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிமுக அறிவித்து இருக்கிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர்களுக்கு சீட் வழங்க இ.பி.எஸ். தரப்பு விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ் தரப்போ தென் மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளருக்கு சீட் பெற்றுத்தர விரும்பியது. தற்போது நீண்ட இழுபறிக்கு பிறகு வேட்பாளர்களை அதிமுக தலைமை அறிவித்து இருக்கிறது.

அந்த வகையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் சி.வி.சண்முகத்துக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், பின்னாட்களில் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக மூத்த அமைச்சர்களின் ஒருவராக விளங்கினார் சி.வி.சண்முகம்.


மற்றொரு வேட்பாளரான ஆர்.தர்மர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு தென் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர். ஆனாலும், தென் மாவட்டங்களை கடந்து மற்ற பகுதிகளில் அதிக அறிமுகம் இல்லாதவர் தர்மர். அதிமுகவின் நீண்ட கால உறுப்பினராக இருக்கும் ஆர்.தர்மர் தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார் தர்மர். ஆனால், கீர்த்திகா முனியசாமிக்கே கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியான ஆர்.தர்மருக்கு மாநிலங்களவையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஓ.பி.எஸ். தரப்பின் பரிந்துரையால் வழங்கி இருக்கிறது அதிமுக தலைமை.

ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தபோது பிரபலம் இல்லாத கடைகோடியில் இருக்கும் உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ள தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது வழக்கம். அப்படிதான் சிறை செல்லும்போது ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக அறிவித்தார் ஜெயலலிதா. தற்போது அதே பாணியில் ஓ.பி.எஸ். ஒன்றிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்புகிறார்.