தடுமாறும் அரசுப்பள்ளிகள்..... தடம்மாறும் அரசு மாணவர்கள்...... ரவுடி மாணவர்களின் மனப்போக்கை மாற்றுவது எப்படி....?

தடுமாறும் அரசுப்பள்ளிகள்.....  தடம்மாறும் அரசு மாணவர்கள்...... ரவுடி மாணவர்களின் மனப்போக்கை மாற்றுவது எப்படி....?


ஆசிரியர் தனது செல்பேசியில் பதிவு செய்யத் தொடங்கியதும் அந்த மாணவனின் குரலும் உடல்மொழியும் இன்னும் முறுக்கேறுகின்றன. "உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?" என்று எதிரியை நோக்கி மார்தட்டிப் பேசுவதுபோல வார்த்தைகளைப் பொழிகிறான் அந்த மாணவன்.

ஏறினா ரயில்,

இறங்கினா ஜெயில்!

என்று அந்த மாணவன் பேசத் தொடங்கியதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதே வரிகளை இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன். சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் ஐ.மாயாண்டி பாரதி இவ்வார்த்தைகளைச் சொல்லும்போதே அவரது கண்கள் மின்னும். சுதந்திரப் போராட்ட காலத்தில் அவர் அனுபவித்த ஒடுக்குமுறைகளை இந்த வார்த்தைகளிலிருந்தே சொல்லத் தொடங்குவார்.

அதே வார்த்தைகளை அந்த வளரிளம்பருவக் குழந்தை சொன்னதும் திடுக்கிட்டுப் போனேன். கத்தியால் குத்திவிடுவேன் என்று மிரட்டிய மாணவனிடமிருந்து பாதுகாப்பு கொடுங்கள் என்று போராடும் ஆசிரியர்கள்.

தனது தாத்தா, காவலர், ஆசிரியர்கள், அருகில் இருக்கும்போதும் அடக்க முடியாத கோபத்துடன் வாதம் செய்யும் மாணவன்...பேருந்தில் கொண்டாட்டமாக பீர் குடித்துப் பார்க்கும் மாணவிகள்...தலைமையாசிரியர் அறையை அடித்து நொறுக்கும் மாணவர்...கடந்த ஓரிரு வாரங்களில் தினம் தினம் இப்படியான காணொலிகள் வலம் வரத்தொடங்கியுள்ளன.

செல்பேசியைத் திணித்தோம்...

செய்திகளில், வாட்சப் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் தீயெனப் பரவும் இத்தகைய பகிர்வுகள் ஆசிரியருக்குப் பாதுகாப்பும் ‘தண்டிக்கும் உரிமையும்' வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. திடீரென இப்போது இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்துவிட்டது எனப் பலரும் புலம்புகிறார்கள். ஒழுக்கமின்மையே காரணம் என்ற பேச்சும் அதிகரித்துள்ளது. எல்லாவற்றையும் சற்றே தள்ளிவைத்து விட்டு யோசிப்போம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளை வீட்டிற்குள் முடக்கி வைத்து விட்டோம். அவர்களுக்கான இயங்கு வெளி முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டது.

நம்மால் முடிந்தவரை அதிகமானவர்களின் கைகளில் செல்பேசியைத் திணித்தோம். பாடங்களை வேதங்களென நம்பும் நம்மால் முடிந்த வழிகளிலெல்லாம் பாடங்களைத் திணிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இணையம் குழந்தைகளை மயக்கியது. வளரிளம் பருவத்தினரின் சிறு குழுக்களில் போதை, கற்பனை உலகின் கதவுகளைத் திறந்தது. வன்முறையே இளமையின் அடையாளம் என்ற நம்பிக்கை வலுத்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டின் கதவுகளும் பள்ளியின் கதவுகளும் திறக்கப்பட்டன. நண்பர்களோடு ஆடி ஓடி விளையாட, பேச, பகிர வேண்டும் என்று ஆசைகளோடு இருந்த குழந்தைகளைக் கைதிகளைச் சிறை மாற்றுவது போலப் பள்ளிக்குள் அடைத்தோம். கற்றல் இடைவெளி என்று கூறிப் பழைய பாடங்களைக் கூறினோம்.

மன அழுத்தங்கள், நடத்தை மாற்றங்கள், போதைப் பழக்கம் குறித்த பேச்சுகள் பெரிதாக எழவில்லை. பொதுத்தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு சில வாரங்கள் கழித்து அறிவிக்கப்பட்ட விளையாட்டுப் பாட வேளையும் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் பள்ளிகளால் மறுக்கப்பட்டிருக்கிறது.

முடி வெட்டுதல் தீர்வாகுமா?

பொதுத்தேர்வு அழுத்தம், மாணவருக்கும் ஆசிரியருக்கும். தேர்வு எழுதிப் பழக வேண்டும் என்று நடந்த திருப்புதல் தேர்வு, ஆசிரியரையே தேர்வுக்குப் பழக்கியது. எப்படித் தேர்ச்சி அடைய வைக்கப்போகிறோம் என்ற திகைப்பைப் போக்கக் கிடைத்த காரணங்களுள் முடி, உடை, பேச்சு ஆகியன பிரதானமாயின. அவற்றைச் சரி செய்வதே ஒழுக்கம் என்று நம்பத் தொடங்கினோம்.


துறை சார்ந்த அழுத்தங்களும் பொதுத்தேர்வு அழுத்தமும் உருவாக்கிய சினம் செல்லுமிடம், எப்போதும் போல குழந்தைகள். தண்டனையும் கண்டிப்பும் தேவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடுகளை மாணவர்கள் அவர்கள் பாணியில் எதிர்க்கிறார்கள். கற்பனை உலகிற்குள் புதைந்து கிடக்கும் சில மாணவர்களைக் காட்டி, ஒட்டுமொத்த வளரிளம் பருவக் குழந்தைகளையும் அரசுப்பள்ளிக் குழந்தைகளையும் குறை சொல்லிவிடும் மனப்பான்மையே பகிர்வுச் செய்திகளுக்குக் காரணமாக அமைகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

குழந்தைகள் மீதான அக்கறையில் சிறிய அளவு கூட வளரிளம் பருவத்தினர் மீது நாம் காட்டுவதில்லை. அவர்களோடு கலந்துரையாடவும் அவர்களின் குரலுக்குக் காது கொடுக்கவும் நாம் தயாராக இல்லை. அடையாளச் சிக்கலில் இருக்கிறார்கள் என்பதை அந்த வயதைக் கடந்து வந்த நாம் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. வளரிளம் பருவத்தினருக்கான இலக்கியம், கலை, திரைப்படம் என எதுவுமே இல்லாத சமூகச் சூழலில் அவர்கள் அதிக நேரம் செலவிடும் பள்ளிகளின் பங்கே மிகவும் முக்கியம். அங்குதான் அவர்கள் சரியான திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

தீர்வுகளை நோக்கி...

குழந்தைகளிடம் இப்போது எவையெல்லாம் குறைந்திருக்கிறது என்று சொல்கிறோமோ அவற்றைப் பழகும் வாய்ப்பையே கடந்த இரண்டாண்டுகளில் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.

விளையாட்டு, கிராமியக் கலைகள், நாடகம், ஓவியம், இசை,பாடல் என அனைத்தையும் பழகும் வாய்ப்புகள் பள்ளியில் கிடைக்க வேண்டும்.

* போட்டிகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு தனித்திறன்களை வெளிப்படுத்தும் கலைவிழாக்களைப் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்த வேண்டும்.

இத்தனை உயர் கல்வி வாய்ப்புகள் இருக்கின்றன என்று மொத்தமாகக் கொட்டாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற படிப்பு பற்றிக் கேட்டறியும் வசதி வேண்டும்.

* பள்ளிக்கு ஒரு உளவியல் ஆலோசகர் வேண்டும்.

வாழ்வியல்திறன் பயிற்சிகள் வேண்டும்.

ஆசிரியர் சங்கங்கள், மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களுக்காகவும் அரசிடம் கோரிக்கைகளை எழுப்ப வேண்டும்.

பன்முக அறிவுத்திறன்கள், இன்றைய குழந்தைகளைக் கையாளும் முறைகள், வளரிளம்பருவ உளவியல் மாற்றங்கள், உணர்வுகளைக் கையாளுதல் ஆகியவை பற்றிய பயிற்சிகளை உயர்நிலை, மேனிலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

கற்பித்தல் முறை, செயல்பாடுகள் வழியானதாகவும் குழந்தைகள் மையமானதாகவும் மாற வேண்டும்.

ஆசிரியர்களின் மனமாற்றமும் அன்பும் வளரிளம் பருவத்தினரை எளிதில் ஆற்றுப்படுத்த உதவும்.

உயிர்ப்பலிகள் அல்லது பெரிய பிரச்சினைகள் வருவதற்கு முன்பே வளரிளம்பருவத்தினருக்கான செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டிய அவசியம் அதிகரித்திருக்கும் காலம் இது.

கல்வியில் உண்மையான அக்கறை கொண்ட அரசால் இத்தகைய மாற்றங்களைச் செய்வது மிகவும் எளிது