இந்தியாவில் ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்: தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு!!

இந்தியாவில் ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்: தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு!!

மத்திய பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகளால் இந்தியாவில் உள்ள ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய பணக்காரர்கள், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று, தாம்பரத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், இந்த விலை உயர்வுக்குக் காரணமான மத்திய பாரதிய ஜனதா அரசு பதவி விலக வலியுறுத்தியும் தாம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

தாம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் விஜய்ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தற்போது உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், பல அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இன்று பெரும்பாலானபேர் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள், தாங்கள் வாங்குகிற சம்பளத்தில் பெரும் பகுதியை பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை, மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான செயல்பாடுகளால் தற்போது ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் தவறானப் போக்குகளால், இந்தியாவில் உள்ள ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரியபெரிய பணக்காரர்கள் எல்லாம், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டு மக்கள் அனைவருமே கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இல்லை.

நாட்டில் தொழில் வளர்ச்சியும் முடங்கிப் போய் கிடக்கிறது. பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது.

நாட்டு மக்களை, குறிப்பாக ஏழைகளை மீண்டும் மீண்டும் ஏமாற்றி, அவர்களை வஞ்சிப்பதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறது. இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் விலை 50 ரூபாய் ஆகிவிட்டது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா கட்சியினர் இப்போது எங்கே? ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் தாண்டி விற்பனை ஆவது அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் பாரதிய ஜனதா அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால், மக்களே அப்புறப்படுத்துவார்கள். விரைவில் இது நடந்தே தீரும்.

இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் இளையராஜா