கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்; தமிழக கவர்னர் ஆர்.என். ரவி

கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும்.  உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்;  தமிழக கவர்னர் ஆர்.என். ரவி

கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்'' என கோவையில் நடந்த தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி பேசினார்.

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் 2 நாள் நடக்கிறது. கூட்டத்தை இன்று தமிழக கவர்னர் ஆர்என் ரவி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:

கல்வி தனித்து இருக்க வேண்டியதில்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும். இந்திய நாட்டிற்கு தேவை என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுமார் 65 ஆண்டுகளாக தான் நாம் இந்தியா என கூறுகிறோம். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலம் தான். ஒவ்வொரு அரசுக்கும் 5 ஆண்டுகள் தான் அதிகாரம் உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்குகிறார்கள். அதுதான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறது. அதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது. அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்சனைகள், சமூக பதற்றங்கள் தொடர்கின்றன. 5 ஆண்டுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை. இதனால் மாநிலங்களுக்கு இடையே, மண்டலம் வாரியாக சமநிலை உருவாவது இல்லை.

.
.
இலக்கு என்ன

2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்த பிறகு புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது. சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது. 18 மொழி செப்புடையாள் என பாரதியின் பாடலை போல ஒரே சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
மேலும் 2047ல் நாம் 100வது சுதந்திர தினம் கொண்டாடுவோம். அப்போது உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறி இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.

இதற்கு, இது போன்ற கூட்டங்கள் அவசியம். எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என துணைவேந்தர்கள் ஆலோசிக்க வேண்டும். மாணவர்கள் 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளது நல்ல விஷயமாகும். ஆனால் நாட்டுக்கு பயன்படும் வகையிலான ஆராய்ச்சிகளை பி.எச்.டி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்'' என்றார். மேலும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

ஸ்டாலின் பேச்சு

இந்த துணை வேந்தர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பேசினார். சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: தென் மண்டல துணை வேந்தர்களின் இந்த கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். கூட்டத்தின் மையப் பொருளாக அனைவருக்கும் தரமான, சமமான, உறுதியான கல்வி என உள்ளது. இதன்மூலம் உயர்கல்வியில் நீடித்த வளர்ச்சி இருக்கும். தரமான உயர் கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக உள்ளது. தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. தேசிய நிறுவனத்தின் தரவரிசையில் 19 பல்கலைக்கழகம், 33 கல்லூரிகள் முதல் 100 இடங்களை பிடித்து உள்ளது'' என பெருமையாக கூறினார்.