காதல் மனைவிக்காக கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய அணை

காதல் மனைவிக்காக கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய அணை

கேரள மாநிலத்தில் ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய புகழ்பெற்ற இடுக்கி ஆர்ச் அணை நீரினால், மாநிலத்தின் முக்கால்வாசி தேவைக்கான 780 மெகாவாட் மின்சார உற்பத்தி, போன்றவைகளை கிடைக்க செய்த காதலர்களுக்கு அரசு செய்த மரியாதைதான் குறவன் - குறத்தி சிலை.

இந்த அணை உருவாகக் காரணமாக இருந்த பழங்குடி மலைவாழ் ஊராலி இனத்தின் தலைவனான செம்பன் கருவெள்ளையன் குலும்பன் மற்றும் அவனது காதல் மனைவி ஆகியோருக்கு மரியாதை செய்ய முடிவு செய்தது கேரள அரசு. சுற்றுலா வளர்ச்சித் துறை மூலம், அணையின் அருகே ராமக்கல் மேடு என்னும் இடத்தில் குறவன் - குறத்தி சிலையை பிரமாண்டமாக அமைத்து காதலுக்கு மரியாதை செய்தது. இந்த பகுதி தற்போது கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.

காதல் மனைவியால் உருவான இடுக்கி அணை

1922 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள மலங்கர எஸ்டேட் பகுதிக்கு கண்காணிப்பாளராக டபிள்யூ. ஜெ.ஜான், அவரது நண்பர் ஏ.சி.தாமஸ் இருவரும் தற்போது அமைந்துள்ள இடுக்கி ஆர்ச் டேம் உள்ள வனப்பகுதிக்கு வேட்டைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டியாக மலைக்குறவர் ஊராலி இனத் தலைவன் செம்பொன் வெள்ளையன் குலும்பன் அடர்ந்த காட்டுக்கு வழிகாட்டியாகச் செல்கிறார். அப்போது தொடர்மழை பல நாட்களாக பெய்கிறது. இரண்டு மலைகளுக்கு நடுவே பெரியாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குறவர் இனத் தலைவனான குலும்பன் தன் ஆசை மனைவி மற்றும் குழந்தை தனித்து இருப்பார்கள் என்று கவலையுடன் கூறி, ஆற்றைக் கடக்க பாதை இருந்தால் எளிதாகச் செல்லலாம் என்று கூறுகிறான்.

ஆனால், வேட்டையாட வந்த ஆங்கிலேயருக்கு, குறவனின் கவலையைக் கேட்டு ஒரு பொறி தட்டியது, இருமலைகளை இணைத்து அணை கட்டி, மின்சார உற்பத்தி செய்யலாம் என்று எண்ணம் தோன்றி, இதற்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

அவ்வாறு குறத்தி இருந்த மலையையும், இந்த பகுதியில் குறவன் இருந்த மலையையும் இணைத்து உருவானதுதான் இடுக்கி ஆர்ச் அணை. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய அணையாக விளங்குகிறது.

ராமக்கல்மேட்டில் ஏன் சிலை

14 ஆண்டுகள் வனவாச காலத்தின்போது ராமன், சீதா, லட்சுமணன் 14 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தபோது ராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். பல இடங்களில் சீதையைத் தேடிய ராமன், இந்த மலைப் பகுதியில் உள்ள ஒரு மேட்டுப் பகுதியில் நின்று தேடினாராம், ராமன் கால் பதித்ததால் 'ராமன் கல்' என்பது மருவி, 'ராமக்கல் மேடு' என்று தற்போது அழைக்கப்படுகிறது. இந்த உச்சியில் நின்று பார்த்தால் தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை, தேவாரம், உத்தமபாளையம் போன்ற ஊர்கள் தெளிவாகத் தெரியும்.

காதல் மனைவியைத் தேடிய ராமன் நின்ற இடத்திலேயே, அணை கட்ட ஆலோசனை கொடுத்த குறவனின் காலுக்கு இந்த இடத்தில் அரசு சிலை நிறுவியது பொருத்தமாக உள்ளது.