ஒமிக்ரான் : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவசர கடிதம்!

 ஒமிக்ரான் : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவசர கடிதம்!

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி முதல் இன்று காலைவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக இருந்தது. தற்போது தெலங்கானாவில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதன் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. கென்யாவிலிருந்து வந்த ஒருவர், சோமாலியாவில் இருந்து வந்தவர் மற்றும் அவருடன் வந்த 7 வயது சிறுவனுக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லையென்றாலும், நோய் பரவுதலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கும் அவசர கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளை புதுப்பித்து மீண்டும் வார்டுகளை தயார்ப்படுத்த வேண்டும். பொது மற்றும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே கொரோனா கிளஸ்டர் கண்டறியப்பட்ட இடங்களின் தகவல்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். விமான நிலையங்களில் அரசு வழிகாட்டுதல்படி பயணிகளை முறையாக கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.