ஒசூர் எல்லையில் குவிந்த அதிகாரிகள்! ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை...!!

ஒசூர் எல்லையில் குவிந்த அதிகாரிகள்! ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை...!!

பெங்களூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு கர்நாடக எல்லையான ஓசூர் அருகே சுகாதாரத்துறை சார்பில் தீவிர கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்று தற்போது கர்நாடக மாநிலத்தில் இரண்டு நபர்களுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

32 நாடுகளில் 377 நபர்களுக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள டாக்டர் மற்றும் தென்னாப்பிரிவிக்காவிலிருந்து வந்த ஒருவர் ஆகியோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவரோடு பழகிய 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் வெளிநாடு எங்கும் செல்லாதவர். வெளிநாட்டினருடனும் பழகாதவர். ஆனால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வைத்து பார்த்தால், ஏற்கனவே கர்நாடகாவில் ஓமிக்ரான் பரவியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மதியம் முதல் தீவிரம்

இந்த நிலையில்தான், தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் ஒரு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஓமிக்ரான் பரவியது நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒசூர் எல்லையில் இன்று மதியம் வரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதன்பிறகு, மதியம் முதல் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடி எல்லை பகுதியில் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி, வாகனத்தில் உள்ள நபர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனரா, என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி வரக்கூடிய வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பதுடன் வாகனத்தில் வரக்கூடிய அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை வாகனங்கள் செல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

ஊரடங்கு இல்லை

இதனிடையே, கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படமாட்டாது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று மாலை அறிவித்தார். ஓமிக்ரான் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருமோ என்ற சந்தேகங்களுக்கு பசவராஜ் பொம்மை முற்றுப் புள்ளி வைத்தார். அதேநேரம் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.