ஒரு வாக்கு என்ன செய்யும்...! அது இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றுமா....?

ஒரு வாக்கு என்ன செய்யும்...! அது இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றுமா....?


ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் ஓட்டு மிக அவசியமான ஒன்று. அந்த ஒரு ஓட்டு தான் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி விடும் என்று சிலர் கருதுவார்கள். அதிலும் சிலர் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து தேர்தல்களிலும் தங்கள் ஓட்டினை பதிவு செய்வர். நம் ஊரில் தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரே வேட்பாளர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்க தொடங்கிவிடுவார்கள். மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

அதனாலேயே மக்கள் அனைவரும் தங்கள் ஓட்டுக்களை தவறாமல் பதிவு செய்வார்கள். ஆனால் அதிலும் ஒரு சிலர் என்னுடைய ஒரு ஓட்டால் என்ன நடந்துவிடப் போகிறது என்று எண்ணி, தனது வாக்கினை பதிவு செய்யாமல் இருப்பார்கள்.

ஆனால் ஒரு சில சமயங்களில் அந்த ஒரு ஓட்டு தான் நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். அப்படி அந்த ஒரு ஓட்டால் ஏதாவது தேர்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றி தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். நம் நாட்டில் 18 வயது நிறைவடைந்த அனைவருமே அனைத்து தேர்தல்களிலும் தங்கள் வாக்கினை பதிவு செய்வது அவசியம்.

ஒவ்வொரு மனிதனும் பதிவு செய்யக்கூடிய தங்களின் வாக்கு மூலமாக தான் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறும் என்று ஒரு சிலர் எண்ணுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நம்முடைய முக்கியமான ஜனநாயக கடமையும் ஓட்டு போடுதல். வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிராக மக்கள் செய்யும் ஒரு துரோகம் என்று கூட கூறலாம். என்னுடைய ஒரு ஓட்டு தான் நாட்டின் தலையெழுத்தை மாற்றி விடுமா என்று சிலர் அலட்சியத்துடன் இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே இந்திய அரசியலில் தொடங்கி அமெரிக்க அரசியல் வரை ஒரு வாக்கினால் பல அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன.

அப்படி ஒரு வாக்கினால் தேர்தலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி இன்று விரிவாக பார்க்கலாம். நமக்கு தெரிந்த பிரதமர்களை பட்டியலிடும் போது முதலில் நினைவுக்கு வருவது அடல் பிகாரி வாஜ்பாய் தான். அப்படிப்பட்ட அவரே ஒரு வாக்கால் தான் தன்னுடைய பதவியை இழக்க நேரிட்டது. 1999 ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். அவரின் அரசாங்கத்திற்கு முன்பு எந்த ஒரு இந்திய அரசாங்கமும் ஒரு வாக்கினால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆட்சியை இழந்தது கிடையாது.

ஆனால் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு இந்தியா இதுவரை பார்க்காத ஒரு நிகழ்வை பார்த்தது. அன்றுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆரம்பத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பிக்கள் அனைவரும் , அப்போது இருந்த வாஜ்பாய் அரசாங்கத்திற்கு தான் வாக்களிக்கப் போவதாக உறுதியாக கூறி இருந்தனர். ஆனால் அவருக்கு எதிராகவே அனைவரும் வாக்களித்தனர். வாக்களிப்பு முடிந்ததற்கு பின்னர் வாஜ்பாய் இந்தியப் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.

ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது ஒரு வாக்கின் காரணமாக ஆட்சியை இழந்தது அதுவே முதல் முறை. அடுத்தது டாக்டர் C.P Joshi அவர் ஒரு இந்திய அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சி உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் தனது எதிர்க்கட்சியிடம் ஒரு வாக்கில் அவர் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் C.P  ஜோஷிக்கு எதிராக கல்யாண் சிங் சவுகான் போட்டியிட்டார். அவர் அந்தத் தேர்தலில் 62,216 வாக்குகள் பெற்றார். ஆனால் சிபி.ஜோஷி 62,215 வாக்குகள் பெற்று, ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அன்று அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனது. நீங்களே நினைத்துப் பாருங்கள், அன்று தேர்தலின்போது யாராவது ஒருத்தர் தங்களின் அலட்சிய போக்கால் வாக்கினை பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம். அதனாலேயே இந்த மாற்றம் நடந்தது.இதில் மற்றொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, தாய், டிரைவர் ஆகியோர் அன்று வாக்களிக்கச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு முன்னதாக மற்றொரு எம்எல்ஏ ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் பதவியை இழந்துள்ளார். அவர் பெயர் ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவர்.

எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதல் முறையாக தோல்வியைத் தழுவியவர் இவர். இவரின் தந்தை பெயர் இராஜையா. இவர் கர்நாடகாவில் சாந்தமிராலி என்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவருக்குப் பிறகு அவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி இரண்டு முறை அந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவர் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக துருவ நாராயணா என்பவர் களத்தில் இறங்கினார்.

தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கையில் ஏஆர் கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 வாக்குகளும், துருவ நாராயணாவுக்கு 40,752 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஏ ஆர் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் வாக்குகளை ஒருமுறை என்ன வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவ்வாறு மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்ட போதிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏ.ஆர் கிருஷ்ணமூர்த்தி தோல்வியை தழுவினார். இதில் மற்றொருவேடிக்கையான விஷயம் என்னவென்றால் கிருஷ்ணமூர்த்தியின் டிரைவர் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு ஏ.ஆர் கிருஷ்ணமூர்த்தி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை இந்திய அரசியலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி நாம் பார்த்தோம். அடுத்ததாக உலக அளவில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி பார்க்கலாம். அதில் முதலாவதாக Andrew Johnson அமெரிக்காவின் 17வது பிரதமர். அவர் மீது பல்வேறு குற்றங்கள் இருந்தபோதிலும் அது எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பல்வேறு குற்றங்கள் இருந்தும் நிரூபிக்கப்படாமல் தப்பிய ஒரே பிரதமர் இவர் தான்.

அமெரிக்காவில் பொதுவாக ஏதாவது ஒரு பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதனை முழுமையாக விசாரித்து வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்கு செலுத்துவார்கள். அதுமாதிரி ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் இவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். அடுத்து லண்டனில் இது மாதிரி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஹென்றி டியூக் என்பவரும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்தது Rutherford B.Hayes. இவர் 1876 இல் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமெரிக்காவின் 19 ஆவது ஜனாதிபதியாக பதவிவகித்தார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வாக்கெடுப்பில் இவர் 185 வாக்குகள் பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட Samuel J.Tilden 184 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். இதுபோன்று உலகம் முழுவதிலும் பல ஏராளமான சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவரின் அலட்சியப் போக்கால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மிகப் பெரிய பதவிகளை இழந்தவர்கள் ஏராளம். அதனால் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி விடும். அதனால் ஒவ்வொரு குடிமகனும் தனது வாக்கினை பதிவு செய்வது மிகவும் அவசியம். எனவே அனைவரும் தங்கள் வாக்கினை தவறவிடாமல் பதிவு செய்யுங்கள்.