சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை : கே.பி. முனுசாமி சிறப்பு பேட்டி.....

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை : கே.பி. முனுசாமி சிறப்பு பேட்டி.....

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவு என்று சொன்னால் முனுசாமி இறந்து விடுவதாக அர்த்தம் என்று அவர் ஆவேசமாக கூறினார்.

மதுரையில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வது பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தலைமை கழக உறுப்பினர்கள் இதுபற்றி முடிவு செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சைக்கு காரணமாக மாறியது. ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்று சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காட்டமாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நகரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி ஏழை,எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்வார்கள் என தெரிவித்திருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்து முனுசாமி கூறியதாவது:

ஏற்கனவே தெளிவாக முடிவு எடுக்கப்பட்டு விட்டது. கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக, கேள்வி எழவில்லை. சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் பலர், ஓபிஎஸ், இபிஎஸ் மூலம் நீக்கப்பட்டுள்ளனர். எந்த சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு கிடையாது. முடிந்த ஒரு விஷயத்திற்கு ஊடகங்கள் கமா போட்டு மீண்டும் தொடர்ந்து வருகிறது.

சசிகலா அவர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றி பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்தபோது கட்சியில் எந்த தலையீடும் செய்ய மாட்டேன். அக்காவிற்கு சேவை செய்ய மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது அரசியலில் தலையிட்டு வருவது சசிகலா, வியாபார ரீதியாக இருந்தாரா என்பதை காட்டுகிறது.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தனக்கென்று ஒரு கொள்கை கொண்டு அவரது குடும்பம் இந்த இயக்கத்தை கையில் எடுக்கும் நிலைக்கு கொண்டு போனார். எம்ஜிஆர் அவர்கள், அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை தொடங்கி அண்ணாவின் உண்மையான தொண்டர்களையும் அவரது சிந்தனை கொள்கைகளை காப்பாற்றினார். அன்றைக்கு சாதி, மதம் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எதுவுமில்லை. அண்ணாவின் கொள்கைகளை மட்டுமே முன்வைத்து தியாக வேலி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

இப்படிப்பட்ட இந்த இந்த இயக்கம் குறிப்பிட்ட சாதிக்கும் சமூகத்திற்கும் ஆதரவு என்று சொன்னால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்துவிடுவார்கள். அதேபோல சாதாரண தொண்டனாக கேபி முனுசாமியாக நானும் இறந்துவிடுவேன் என்று அர்த்தம். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சட்டமன்றத்திலும், உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டு முகத்துடன் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டுமானால் ஒருமுகமாகவே செயல்பட வேண்டும். திமுகவின் செயல்பாடுகளுக்கு இடையேயும், எதிர்க்கட்சியான அதிமுக அமைதியாக உள்ளதென்றால், அவர்கள் மக்களுக்கு எதாவது செய்வார்கள் என்றுதான் பொறுமை காக்கிறோம். இவ்வாறு முனுசாமி தெரிவித்தார்.