மதிய சாப்பாடு, மாலை காபி: திமுக எம். பி. யின் கஸ்டடி விசாரணை!

 மதிய சாப்பாடு, மாலை காபி: திமுக எம். பி. யின் கஸ்டடி விசாரணை!


கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்பி ரமேஷுக்கு 24 மணி நேரம் போலீஸ் கஸ்டடி அளித்திருந்த நிலையில் 4 மணி நேரத்திலேயே கஸ்டடி விசாரணையை முடித்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டார்கள் போலீசார்.

தனது முந்திரி ஆலையில் வேலை பார்த்த கோவிந்தராஜ் என்பவரின் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார் ரமேஷ். அவருக்கு இரண்டு நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று அக்டோபர் 13ஆம் தேதி ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் சிபிசிஐடி போலீசார். அப்போது இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்ட நிலையில் நீதிபதி ஒருநாள் மட்டுமே போலீஸ் கஸ்டடியில் ரமேஷை விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நீதிமன்றத்திலிருந்து ரமேஷை அழைத்துக்கொண்டு கடலூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு சென்றார்கள் போலீசார். அங்கே அடையார் ஆனந்த பவனில் இருந்து வந்த சாப்பாடு எம்பிக்கு தயாராக இருந்தது. அதை அவர் சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் விசாரணை நடத்தினர்.

அதற்குள் மாலை 4 மணி ஆகி விட ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட காபி எம்பி ரமேஷுக்கு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே நாளை நீதிமன்றம் விடுமுறை என்பதால் 24 மணிநேர போலீஸ் கஸ்டடி முடிந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாமல் போய் விடும். எனவே இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடலாமென போலீசார் மேலதிகாரிகளிடம் கேட்டனர்.

இதையடுத்து இன்று மாலை 4.50 மணிக்கு ரமேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

24 மணிநேர போலீஸ் கஸ்டடி கொடுக்கப்பட்ட நிலையில் ஆயுதபூஜை விடுமுறை காரணமாக 4 மணி நேரத்திலேயே விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

நீதிபதி வரும் 27 ஆம் தேதி வரை, அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் பிறகு மாலை 5.50 க்கு கடலூர் கிளை சிறையில் எம்பி ரமேஷ் அடைக்கப்பட்டார்.