தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும். அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தந்த பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.