குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு தரமான கல்வி தரும் தனியார் பள்ளி ஆசிரியர்களை போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயல்படவேண்டும்; தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேச்சு.....

குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு தரமான கல்வி தரும் தனியார் பள்ளி ஆசிரியர்களை போல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயல்படவேண்டும்; தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேச்சு.....


தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக மாணவர்கள் வீட்டில் போன் மூலம் ஆன்லைனில் படிக்கிறார்கள். செல்போனில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. அதனால் மாணவர்களை நல்லொழுக்கப்படுத்துவது ஆசிரியரின் கையில்தான் உள்ளது.

அரசுப் பள்ளிகளைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது தலைமை ஆசிரியர் பொறுப்பு மட்டுமல்ல, அந்தப் பள்ளியில் வேலை செய்யும் ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பு.

ஆசிரியர்கள், நம்முடைய ஊதியத்தை எண்ணிப் பாருங்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ரூ.1.25 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஏழாயிரம் ரூபாய், எட்டாயிரம் ரூபாய் என்று சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், அங்கு படிக்கக் கூடிய மாணவர்கள்தான் மருத்துவ இடங்கள், பொறியியல் துறை, பல் மருத்துவம் ஆகியவற்றைப் படிக்கக் கல்லூரிகளில் இடம்பிடிக்கிறார்கள்.

எந்தப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்று பார்த்தால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்.

அதுபோல நாமும் (அரசுப் பள்ளி ஆசிரியர்களும்) போட்டி போட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் நான் குறிப்பிடவில்லை. சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைத் திறம்பட வளர்த்திருக்கிறார்கள். கடின உழைப்பைக் கொடுக்கிறார்கள். சிலர் இரவில் அமர்ந்தும் பணியாற்றுகிறார்கள். அதைப்போல ஒவ்வொரு ஆசிரியரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்''.

இவ்வாறு அமைச்சர் கணேசன் பேசினார்.