வீடு தேடிச் செல்லும் சசிகலா: செல்போன் பேச்சுக்கு பிறகு எடுக்கும் அரசியல் அஸ்திரம்!

 வீடு தேடிச் செல்லும் சசிகலா: செல்போன் பேச்சுக்கு பிறகு எடுக்கும் அரசியல் அஸ்திரம்!

சொத்துகள் முடக்கம், பினாமி சட்டம் என்று சசிகலாவை மையப்படுத்தி சர்ச்சை செய்திகள் ஒருபக்கம் வந்துகொண்டிருந்தாலும்.

இன்னொரு பக்கம் தனது அரசியல் நடவடிக்கைகளை அடுத்தடுத்த வடிவங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தண்டனைக் காலம் முடிந்து பெங்களூரு சிறையிலிருந்து வந்த சசிகலா வரும்போதே அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை திரும்பினார். அதன் பின் அப்போதைய அதிமுக ஆட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, டெல்லி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தேர்தலுக்கு முன்பு அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனாலும் அப்போது அமமுக வேட்பாளர்கள் சசிகலாவிடம் ஆசி வாங்கிச் சென்றார்கள்.

தேர்தல் முடிவுக்குப் பின் திமுக ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் மோடி சந்திப்புக்காகக் காத்திருந்தார் சசிகலா. அதன் பின் சசிகலா எதிர்பார்த்தது போலவே முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைகள் தொடங்கின. மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட வேண்டும் என்பது வரையிலான நெருக்கடிகளில் சசிகலாவுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

இது ஒருபுறம் இருக்க அதிமுகவின் சீனியர்கள், கட்சி நிர்வாகிகள், அமமுக நிர்வாகிகளுடன் அலைபேசி மூலம் உரையாடி அதன் பதிவுகளை சசிகலா தரப்பே வெளியிட, இது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சசிகலாவுடன் பேசிய நபர்களை நீக்கப்போவதாக எடப்பாடி எச்சரித்தும் சசிகலாவுடன் பேசிய அதிமுகவினரின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் சசிகலாவுடன் பேசிய அத்தனை பேரையும் அதிமுகவிலிருந்து எடப்பாடியால் நீக்க முடியவில்லை.

ஊரடங்கு விரைவில் முடியும் என்று கருதி அலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்த சசிகலா... ஊரடங்கு தொடர்வதால் தற்போது அடுத்த கட்ட அரசியல் வடிவத்தைக் கையிலெடுத்திருக்கிறார். அதுதான் கட்சி நிர்வாகிகள் வீட்டுக்கு நேரடி விசிட் செய்வது.

உடல் நலம் நலிவுற்ற அதிமுக முக்கியப் பிரமுகர்களை நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரிப்பது, அவர்கள் மறைவுற்றால் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பது என்று சசிகலா இப்போது நேரடியாகச் செல்கிறார். ஏற்கனவே அவைத் தலைவர் மதுசூதனனைச் சந்திக்க அப்பல்லோ சென்றபோது அதேநேரத்தில் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி சசிகலா வரும் தகவல் அறிந்ததும் சட்டென புறப்பட்டுவிட்டார். ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கும் நேரில் சென்று ஓபிஎஸ் சை ஆறுதல் படுத்திவிட்டு வந்தார் சசிகலா. அப்போது முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றவர்கள் சசிகலாவைப் பார்த்த பார்வை அதிமுக வட்டாரத்தில் குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி முன்னாள் அமமுக முக்கிய நிர்வாகியும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த வெற்றிவேலின் குடும்பத்தினரைச் சந்தித்தார் சசிகலா.

செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை வெற்றிவேலின் மகன் பரத்துக்கு சசிகலா அலுவலகத்திலிருந்து போன். “நாளைக்குச் சின்னம்மா உங்க வீட்டுக்கு வர விரும்புறாங்க” என்றதும் பரத் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அதன்படியே மறுநாள் வெற்றிவேலின் வீட்டுக்குச் சென்ற சசிகலா, அவரது படத்துக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கொரோனா காரணமாகக் காலமானார் வெற்றிவேல். அப்போது சசிகலா சிறையிலிருந்தார். வெற்றிவேல் குடும்பத்தினரை அவரது முதல் நினைவு தினத்துக்கு முன் சந்திக்க விரும்பியிருக்கிறார் சசிகலா. அதன் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

நம்மிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள், “ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முழுதாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னால்தான் பெரும் கூட்டத்தைக் கூட்டி சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய முடியும். அப்போதுதான் தனது பலத்தையும் சசிகலா காட்ட முடியும். ஆனால் அதுவரை சும்மா இருக்க விரும்பவில்லை சசிகலா.

ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு வழக்கில் சட்ட நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் முதலில் அலைபேசி மூலம் அதிமுகவினரைத் தொடர்புகொண்ட சசிகலா இனி நேரடியாக வீடுகளுக்கே செல்ல இருக்கிறார். முடிந்தால் தினமும் ஒரு அதிமுக நிர்வாகியின், தொண்டரின் வீட்டுக்குச் செல்வது என்ற திட்டத்தில் இருக்கிறார். இதற்காக அவர்களின் குடும்ப நல்லது கெட்டதை பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். இனிமேல் சசிகலா அடிக்கடி அதிமுக பிரமுகர்களின் வீடு தேடிச் சென்று பேசுவார். சசிகலா அதிமுகவை மீட்க அவசரப்படவில்லை. அதேநேரம் படிப்படியான முயற்சிகளைத் தொடர்ந்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொண்டிருக்கிறார். சுற்றுப்பயணம் என்பது ஊரடங்கு முடிவுக்குப் பின் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு முன் ஒவ்வொரு அதிமுக நிர்வாகியின் வீட்டுக்கும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார் சசிகலா” என்கிறார்கள்.

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்