தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை எதிர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதையும் சற்று சிந்திக்க வேண்டும்.....

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை எதிர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதையும் சற்று சிந்திக்க வேண்டும்.....


தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு கணேசன் அவர்கள் ஒரு அருமையான கேள்வி ஒன்றை கேட்டிருந்தார் வெறும் 8000 சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கும் ரிசல்ட் 1.25 லட்சம் சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களால் ஏன் கொடுக்க முடியவில்லை என்று. மிகவும் அருமையான  கேள்வி. அவரை மனதார பாராட்டுகிறேன். 

ஒரு பொதுவான கருத்து உள்ளது. அரசு பள்ளிதான் கல்வி கோவில் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் கல்வி கடவுள்கள் என்றும் தனியார் பள்ளி மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளை நடைபெறும் இடங்கள் அதனை நடத்துபவர்கள் அனைவரும் கொள்ளைக்கூட்ட தலைவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகின்றன. சில கசப்பான உண்மைகளையும் சொல்ல மறந்த கதைகளையும் இங்கு கூறலாம் என்று நினைக்கிறேன்.

1. தனியார் பள்ளிகளும் பயிற்சி நிறுவனங்களும் ஒவ்வொரு வருடமும் கட்டாயமாக ரிசல்ட் கொடுத்தே ஆகவேண்டும். ரிசல்ட் இல்லையென்றால் தனியார் பள்ளிகளும் பயிற்சி நிறுவனங்களும் மூடப்படும் நிலை கூட வரும். ஆனால் அரசு பள்ளிகளில் 0% ரிசல்ட் கொடுத்தாலும் 1.5 வருடங்கள் பள்ளிக்கே செல்லவில்லை என்றாலும்  அக்கௌன்ட் தேடி சம்பளம் வரும்.

2. தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வி துறைக்குத்தான் அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த வருட பட்ஜெட்டில் ஓதுக்கப்பட்ட நிதி 35000 கோடிகள். அதில் 75% (27000 கோடிகள்) ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் செல்கிறது.   

3. மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் அவ்வளவு வருமானம் வருகிறதா?? 

4. இப்பொழுது மிகவும் பரபரப்பில் உள்ள நீட்  பற்றி எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் நீட் 2021 மொத்தமாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 110000. அதில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் தோராயமாக 30% (இது மிக அதிகம்) என்று வைத்து கொண்டால் கூட சுமார் 35000 மாணவர்கள். அனைத்து 110000 மாணவர்களும் பயிற்சி எடுத்து கொண்டார்கள் என்று வைத்து கொண்டால் கூட அதில் வரும் தொகை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் 20 ல் ஒரு மடங்கு கூட வருமா என்று நீங்களே கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள்.

5. பயிற்சி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம் மட்டும்தான் மக்கள் பணமா?? அதை விட பல மடங்குகள் கொடுக்கப்படும் சம்பளங்கள் யார் பணம்?? அது மக்கள் பணம் இல்லையா??

6. நீட் வருவதற்கு முன் இருந்த நிலை என்ன?? 2006 ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை நீட் தேர்வு இல்லாத பொழுது மொத்தம் இருந்த 30000 மருத்துவ இடங்களில் வெறும் 219 இடங்கள் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இது வெறும் 0.7%. ஆண்டிற்கு வெறும் 19 மாணவர்கள் மட்டுமே.

7. ஆண்டிற்கு வெறும்  19 மாணவர்களை உருவாக்கவா 27000 கோடிகள் சம்பளமாக கொடுக்கப்படுகிறது?

8. நீட் மட்டும்தான் குறிக்கோளா?? ஆசிரியர்களுக்கு வேறு வேலைகள் இல்லையா என்று கேட்கலாம்? இங்கு கேள்வியெல்லாம் மொத்த மருத்துவ இடங்களிலும் பொறியியல் இடங்களிலும் அரசு பள்ளி ஆசிரியர்களால் ஒரு 10% இடங்களை கூட அரசு பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து பெற வைக்க முடியாதா??

9. 7.5% முழு மனதுடன் வரவேற்கிறேன் அந்த பாவப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்காக. ஆனால் யாராவது ஒருவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றால் என்ன ஆகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு செலவு செய்து (35000 cr per year) அரசு பள்ளியில் ஒரு 7.5% மாணவர்களை கூட உருவாக்க முடியவில்லையா என்று நியாயமான கேள்வியை கேட்டால் என்ன செய்வது 

10. அரசு பள்ளியில் ஒழுங்காக கற்று கொடுத்தால் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் தேவை என்ன?? 

11. கடந்த 20 வருடங்களில்தான் தனியார் பள்ளிகள் அதிகமாகி உள்ளது. மாணவர்களுக்கு தேவைப்படுவது அரசு பள்ளியில் கிடைக்காததால் தானே அவர்கள் தனியார் பள்ளியை நாடி செல்கிறார்கள்???

12. அரசு பள்ளி ஆசிரியர்களே உங்களுக்கு என் மீது கோவம் வரலாம். உங்கள் மனச்சாட்சியை கேட்டு பாருங்கள் நீங்கள் நடத்தும் வகுப்புகளில் உங்கள் குழந்தைகளை உட்கார வைப்பீர்களா??? அல்லது உங்கள் குழந்தைகளை சேர்த்துள்ள தனியார் பள்ளிகளில் நீங்கள் கற்று தருவது போல் கற்றுத்தந்தால் சும்மா விட்டு விடுவீர்களா??  

சில அன்பர்கள் இங்கு வந்து கேட்கிறார்கள் நீ பயிற்சி  நிறுவனம் நடத்துகிறாய் அதனால் இவ்வாறு பேசுகிறாய் என்று?? பயிற்சி நிறுவனம் நடத்தினால் உண்மையை பேச கூடாதா?? சேலம் பகுதியில் கிராமபுற மாணவர்களிடம் நீட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை நீட் தேர்வு எழுத வைத்து என்னிடம் தேர்வாகி MBBS சேர்ந்துள்ள 345 மாணவர்களில் 275 மாணவர்கள் கிராமபுற மாணவர்களை உருவாக்கியுள்ள நான் நீட் தேர்வை பற்றியும் கல்வியை பற்றியும் பேசாமல் ஆப்பக்கடை  வைத்துள்ளவரா பேச முடியும்????

ஓன்றை மட்டும் அடித்து கூற முடியும் நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது வடி கட்டின பொய். நீட் தேர்வு இல்லாமல் +2 மதிப்பெண் இருந்த பொழுதும் ஏழை மாணவர்களுக்கு MBBS கிடைக்கவில்லை என்பதே சத்தியமான உண்மை. 

+2 மதிப்பெண்கள் மூலமாக அரசு பள்ளியில் படித்து விட்டு கல்லூரிக்கு சென்ற பொழுது தனியார் பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களுடன் போட்டி போட முடியாமல் ஒவ்வொரு நாளும் தாழ்வு மனப்பான்மையில் செத்து பிழைத்தது என்னை போன்ற அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே அனுபவித்த அனுபவிக்கும் வேதனை

ஏழை மாணவர்களுக்கு MBBS கிடைக்க வேண்டும் என்றால் நீட் தேர்வை எடுப்பதால் ஒன்றும் ஆக போவதில்லை. அரசு பள்ளியில் ஒழுங்காக மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும். அவர்களின் கல்வித்தரம் தனியார் பள்ளிகளை விட அதிகமாக இருக்கவேண்டும்.  அதற்கு ஆவண செய்ய்யங்கள் என்று அரசையும் தயவு செய்து நன்றாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அரசு பள்ளி ஆசிரியர்களையும் ஒரு பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவனாக காலை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையை எப்பொழுதும் உரக்க சொல்வோம். உண்மை என்பது தண்ணீருக்கு அடியில் வைக்கப்படும் நீர் குமிழி போன்றது. அதை வெகுநேரம் மறைத்து வைக்க முடியாது என்பது அறிவியலறிந்த தத்துவமறிந்த அனைவருக்கும் தெரியும்.

பெரியசாமி தங்கவேல்.