பொய் செய்தி பரப்புகிறார்கள்; முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி விளக்கம்...!

பொய் செய்தி பரப்புகிறார்கள்; முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி விளக்கம்...!


அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, 1.04.2016 முதல் 31.03.2021 வரை 28.78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்திருக்கிறார்’’ என்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செப்டம்பர் 15-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 16-ம் தேதி காலை வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில், ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல குழுக்களாகப் பிரிந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர். வீரமணியின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையில், காந்தி ரோடு, பார்த்தசாரதி தெருவிலுள்ள அவரது இரண்டு வீடுகளுக்கும், அவருக்குச் சொந்தமான ஆர்.எஸ்.மஹால் திருமண மண்டபத்துக்குமாக இனோவா காரில் வீரமணியை அமரவைத்துக்கொண்டு இங்கும் அங்குமாக விரைந்தனர்

இந்தச் சோதனையில் ரூ.34 லட்சம் பணம், ரூ.1.8 லட்சம் மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ், மினி கூப்பர் உட்பட ஒன்பது சொகுசு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் தங்க நகைகள் (அதாவது 623 சவரன்), 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளிப் பொருள்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டிருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய கே.சி.வீரமணிமீது மணல் கடத்தல் வழக்கும் பாயவிருக்கிறது என்று பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.


இந்தநிலையில், உண்மைத் தன்மையை ஆராய்ந்து செய்திகளை வெளியிடுமாறு ஊடகங்களுக்கு கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி, ``உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகள் வருகின்றன. பத்திரிகை தர்மம் இருக்கிறது. ஆதாரங்களை முன்னிறுத்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் செய்திகளை வெளியிடுங்கள். பல்வேறு செய்திகள் உண்மைக்குப் புறம்பாக இருக்கின்றன. நான் பாரம்பர்ய குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய குடும்பத்துக்கென்று பெரிய பாரம்பர்யம் இருப்பது நிருபர்களுக்குத் தெரியும். சிறிய வயதிலிருந்தே விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களைப் பயன்படுத்திவருகிறேன்.

பள்ளிப் பருவத்தில் ஜெர்மன் மெர்சிடீஸ் பென்ஸ் கார் பயன்படுத்தினேன். தொழிற்சாலை, பீடித்தொழில், விவசாயம் என எங்களிடம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்த காலம் அது. என்னுடைய மனைவிகளும் வசதிபடைத்தவர்கள்தான். இப்போது நடந்த ரெய்டில் கிட்டத்தட்ட 300 சவரன் இருப்பதாக விஜிலென்ஸ் கூறியிருக்கிறது. தேர்தல் வேட்புமனுவில், அதற்கு மேல் நகைகள் இருப்பதாகக் கணக்கு காண்பித்திருக்கிறேன். இதனால், நகைகளை என்னிடமே கொடுத்துவிட்டது விஜிலென்ஸ். 2,508 அமெரிக்க டாலர் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இது, இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய். ஆனால், வாட்ஸ்அப்பிலும், ஊடகங்களிலும் பண்டல் பண்டலாக வெளிநாட்டு கரன்சி கைப்பற்றப்பட்டிருப்பதாக தவறான செய்தியைப் பரப்பியுள்ளனர். என்னுடைய மகள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்கிறார். சட்ட விதியின்படியே வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தேன். 5,000 டாலர் வரை வைத்துக்கொள்ளலாம் என சட்ட விதியில் இருக்கிறது.

லாக்கரிலிருந்து 10 ரூபாய் ஒரு கட்டும் எடுத்துள்ளனர். மொத்தமே 5,600 ரூபாய் பணத்தைத்தான் கைப்பற்றியுள்ளனர். ஆனால், ரூ.34 லட்சம் என செய்தி வெளியாகியிருக்கிறது. கைப்பற்றப்பட்ட 5,600 ரூபாயையும் என்னிடமே கொடுத்துவிட்டார்கள்.

 என்னிடமுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழைமையானது. அது ஒரு வின்டேஜ் கார். அதன் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்காது. ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே வருமான வரி செலுத்துகிறேன்.

 வீட்டில் இருந்த மணல் குறித்தும் பெரிதாகப் பேசுகிறார்கள். வீடு கட்டுவதற்காக மணல் வைத்திருக்கிறேன். அதற்கான ரசீதுகளும் என்னிடம் இருக்கின்றன. எனக்கு வங்கிக் கடனே ரூ.40 கோடிக்கு மேல் இருக்கிறது. என்னுடைய சொத்துகள் அண்ணன், தம்பியின் பெயரில்கூட கிடையாது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்காமல், என் பெயர், புகழ் பாதிக்கப்படாமல் உண்மைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்’’ என்றார் கே.சி.வீரமணி.

யார் சொல்வது உண்மை....?