மொட்டை போடும் பணியாளர்களுக்கு ரூ.5000!!

 மொட்டை போடும் பணியாளர்களுக்கு ரூ.5000!! 


திருக்கோயில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1749 பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, அமைச்சர் சேகர்பாபு துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும்பட்சத்தில், அந்த திருமணத்தை கோயில்களில் நடத்தக் கட்டணம் இல்லை உள்ளிட்ட 112 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கோயில்களில் மொட்டையடிக்கும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(செப்டம்பர் 7) நடைபெற்ற சட்டப்பேரவையில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்துள்ளது. இந்த திட்டத்தைக் கூட சிலர் விமர்சனம் செய்ததை தொலைகாட்சிகளில் பார்க்க முடிந்தது.

கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு பக்தர்களிடம் இருந்து 500, 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தன் உயிரை கொடுப்பதைப் போன்று விருப்பப்பட்டு வளர்த்த முடியை பக்தர்கள், கடவுளுக்காக காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதுதொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இது மக்களிடையே வரவேற்பு பெற்றாலும், மொட்டை போடும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால், திருக்கோயில்களில் பதிவு செய்துள்ள மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். முடி காணிக்கைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் படி, மொட்டை போடும் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.