1 முதல் 4ம் வகுப்பு வரை திறக்க முடிவெடுப்பதில் குழப்பம்.....! 5 முதல் 8ம் வகுப்பு வரை அடுத்த மாதம் திறப்பு....?

 1 முதல் 4ம் வகுப்பு வரை திறக்க முடிவெடுப்பதில் குழப்பம்.....! 5 முதல் 8ம் வகுப்பு வரை அடுத்த மாதம் திறப்பு....?


சென்னை :தமிழகத்தில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல், பள்ளி கல்வி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். பள்ளிகளை திறக்க பல இடங்களில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்கின்றன.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, மாணவர்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளை குறைக்க, தொடக்கப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல தனியார் பள்ளிகள் தரப்பிலும் கோரிக்கை எழுந்து உள்ளது.ஆனால், பள்ளி கல்வி அதிகாரிகளில் ஒரு தரப்பினரும், அரசு பள்ளி ஆசிரியர்களும், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒருவேளை பள்ளிகளை திறந்து, சிறு வயது குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால், தங்கள் மீது விமர்சனங்கள் எழுமோ என அவர்கள் அச்சப்படுகின்றனர். அதே பயத்தில் ஒரு தரப்பு பெற்றோரும், தொடக்க வகுப்புகளுக்காக பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக, தொடக்கப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல், பள்ளி கல்வித் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துஉள்ளனர். அதேநேரம், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அக்., 5 மற்றும் 6ம் தேதிகளில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தரப்பில், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அறிக்கை, 15ம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மீது விரைவில் முடிவெடுத்து, உரிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

கொரோனாவால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், ஆன்லைன் வழியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர்; தினமும் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். கணினி வழி தேர்வும் நடத்தப்படுகிறது.ஆனால், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், பள்ளி கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவில்லை. கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை 'வீடியோ'வாக ஒளிபரப்புகின்றனர்.

இதை புள்ளி விபரப்படி பல மாணவர்கள் பார்ப்பதாக கணக்கு காட்டினாலும், உண்மையான நிலவரப்படி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லாதது, பெரும் குறையாக உள்ளது. ஆன்லைன் வகுப்புகளும் இல்லை என்பதால், அவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடியாக பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.