தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தடுப்பூசி மையமும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துதல் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மொத்தமாக சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு இரண்டு தடுப்பூசி முகாம்கள் என்ற அடிப்படையில் நேற்று மட்டும் 400 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியின் நடவடிக்கையால் தடுப்பூசி திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஆகஸ்ட் 27) தொடங்கி வைத்து பேசினார். அதில் ,” தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு சிறந்த இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை அரசு நிர்வாகங்களில் 2 கோடியே 81 லட்சம் பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் 20 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 3 கோடியே 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னையிலும் ஒரே நாளில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 82 சதவிகிதம் பேரும், 90 சதவிகித ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த முகாமை பயன்படுத்தி மீதம் இருப்பவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.