திருநெல்வேலி மாவட்டத்தில், பள்ளி-கல்லூரிகள் திறப்பு! கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில், பள்ளி-கல்லூரிகள் திறப்பு! கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், முழுமையாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, 13 சிறப்பு குழுக்கள்! மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு! திருநெல்வேலி,ஆக.30:- உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும், கொரோனா பரவல் தமிழ்நாட்டில், பெருமளவில் குறைந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கூடங்களை பொறுத்தவரையில், 9-ஆம் வகுப்பு முதல், 12-ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளை பொறுத்தவரையில், அனைத்து வகுப்புகளையும், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறப்பதற்கு, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும், அத்தகைய முறையில், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. அவ்வாறு திறக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், முழுமையாக பின் பற்றப்படுகின்றனவா? என்பதை கண்காணிப்பதற்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர பகுதிகளில் 4, புறநகர் பகுதிகளில் 9 என, மொத்தம் 13 " சிறப்பு குழுக்கள்" ஏற்படுத்தப் பட்டுள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, தெரிவித்து உள்ளார். இன்று (ஆகஸ்ட்.30) மாலையில், திருநெல்வேலியில், இது தொடர்பாக நடைபெற்ற, ஆலோசனை கூட்டத்திற்கு, தலைமை வகித்து பேசிய, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, "வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை ஆகிய, 4 துறைகளையும் சார்ந்த உயர் அலுவலர்கள், இந்த குழுவில் இடம் பெற்றிருப்பர். இவர்கள், தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, நேரில் சென்று, அவற்றை பார்வையிட்டு, அங்கெல்லாம் கொரோனா விதிமுறைகள், பின்பற்றப்படுவது குறித்து, கள ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை வழங்குவர்!" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர், "கல்வி நிறுவனங்கள் அனைத்திலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, "சிறப்பு" முகாம்களும், நடத்தப்படுகின்றன!" என்றும் சொன்னார். இந்த " ஆலோசனை" கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கணேஷ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குத்தாலிங்கம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தியாகராஜன் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா அம்மையார் ஆகியோர், பங்கேற்றிருந்தனர்.