ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 விலை வழங்குக... மத்திய அரசுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை....

 ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 விலை வழங்குக... மத்திய அரசுக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை....


ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் விலை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு

அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்திய ஒன்றிய அரசுக்கும், தேசிய கூட்டுறவுசர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குநருக்கும் 11.8.2021 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டி.ரவீந்திரன், பொதுச்செயலாளர் என்.கே.சுக்லா, இணைச்செயலாளர் விஜு கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பலராமன் ஆகியோர் தேசியசர்க்கரை துறை நிர்வாக இயக்குனரை நேரில் சந்தித்து நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்தனர். 

அனைத்தையும் கவனத்துடன் கேட்ட தேசிய நிர்வாக இயக்குநர் பிரகாஷ் நெய்ன்வார் அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதாகவும் சில கோரிக்கைகளை நிறைவேற்றிட சாத்தியம் உள்ளது என்று தெரிவித்தார். 

கரும்பு கட்டுப்பாடு சட்டத்தை பலப்படுத்துக! 

உரம், டீசல் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வுகளில் கரும்பு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. உற்பத்திச் செலவு உயர்வுக்கு ஏற்ப கரும்புக்கு விலை உயர்த்தி வழங்கப்படவில்லை. 

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு குவிண்டால் கரும்புக்கு பத்து ரூபாய் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள ஐந்து கோடி கரும்பு விவசாயிகளை பாதுகாத்திட2020-21 பருவத்திற்கு 9.5 பிழி திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்குஐயாயிரம் ரூபாய் விலை அறிவித்திடவேண்டும். பத்து சதம் பிழிதிறனுக்கு விலை அறிவிப்பதற்கு பதிலாக 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்டகரும்புக்கு விலை அறிவித்திட வேண்டும். 

கரும்புக்கு விலை நிர்ணயிப்பதற்கு வருவாய் பங்கீட்டு முறையை ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு மாநில அரசு அறிவித்து வழங்கி வந்த பரிந்துரை விலையை நிறுத்திவிட்டார்கள். வருவாய் பங்கீட்டு முறை விவசாயி களுக்கு பாதகமானது அதை கைவிடவேண்டும். 

மாநில அரசுகள் பரிந்துரைவிலையையும், லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு (5ஏ பிரிவை) மீண்டும் அமல்படுத்திட வேண்டும். கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 விவசாயிகளுக்கு பாதுகாப்பானது. ஒன்றிய அரசு இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும். 

கரும்பு கட்டுப்பாடு சட்டத்தை பலப்படுத்தி செயல்படுத்திட வேண்டும். 

பாக்கியை சட்டப்படி வட்டியுடன் தருக!

விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு 14 நாட்களில் பணத்தை தர வேண்டும் என்பது சட்டம். ஆனால் பல மாதங்களாக கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தராமல் இழுத்தடிக்கின்றன. நாடு முழுவதும் 22 ஆயிரம் கோடி ரூபாய் கரும்புபண பாக்கி உள்ளதை சட்டப்படி 15 சதவீதம் வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்கிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

கரும்பு பண பாக்கியை சட்டப்படி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 

நாடு முழுவதும் பல தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை தராமல் ஆலையையும் மூடிவிட்டார்கள். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் தரணி, அம்பிகா, ஆரூரான், இஐடி பாரி ஆலைகள் எனஎட்டு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளது. மூடியுள்ள தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பணத்தை முன்னுரிமை அடிப்படையில் விவசாயி களுக்கு பெற்றுத்தர ஒன்றிய அரசு,மாநில அரசுகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மாநில அரசின் கட்டுப்பாட்டிலே 

கூட்டுறவு அமைப்புகள்

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்  ஹெவி மொலாசஸ்சில் இருந்து எத்தனால்உற்பத்தி செய்யும் பிளேன்ட்டுகளை அமைத்திட ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு தேவையான நிதியைஒதுக்கிட வேண்டும். நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை பாதுகாத்து மேம்படுத்திட மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு சிறப்பு நிதிவழங்கிட வேண்டும். 

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் நாடு முழுவதும் கடனில்உள்ளன. சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் உள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஆலைகளுக்கு 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும், அரியானாவில் உள்ள 11 கூட்டுறவு ஆலைகளுக்கு 3025 கோடிரூபாயும் கடன் உள்ளது. 

இந்த கடன்தொகையை ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.  கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்திட வேண்டும்.

சர்க்கரை விற்பதற்கு கோட்டா முறையை கைவிடுக!

சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்த சர்க்கரையில் இருப்பு உள்ளதில் மாதம் 8 சதவீதம் மட்டுமேவிற்பனை செய்து கொள்ள ஒன்றியஅரசு அனுமதி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு போன்ற சிறிய மாநிலங்கள் உரிய காலத்தில் சர்க்கரையை விற்பனை செய்திட முடியாமல், கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியை தர முடியாமல் சிரமப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் கூட்டுறவு ஆலைகள் சர்க்கரையை வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி செலவு செய்ததன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் முன்னூறு கோடி ரூபாய் வரை கூடுதலாக வட்டி கட்டியுள்ளன. 

எனவே, சர்க்கரை விற்பதற்கு கோட்டா முறையை கைவிட வேண்டும் அல்லது தமிழ்நாடு போன்ற சிறிய மாநிலங்களில் இருப்பு உள்ள சர்க்கரைகளும் 25 சதவீதத்தை சர்க்கரை ஆலைகள் விற்பனை செய்து கொள்ள ஒன்றிய அரசுஅனுமதித்திட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.