வாக்கு பதிவு சாதகமாக இருக்குமா? ஐபேக் ஆபீசுக்கும் வீட்டுக்குமாக போய்வந்த மு.க. ஸ்டாலின்
: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்ற போது தமது தேர்தல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்தில் அமர்ந்து களநிலவரம் தொடர்பாக நீண்டநேரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் போட்டிருந்தது. இதனை மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். பிரஷாந்த் கிஷோரை தேர்தல் வியூக ஆலோசகராக திமுக நியமித்தது குறித்து கடும் விமர்சனங்களும் எழுந்தன.
திமுகவிலேயே மூத்த தலைவர்களுக்கும் ஐபேக் நிர்வாகிகளுக்கும் இடையே உரசல் என அரசல் புரசலாகவும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன. அதையெல்லாம் திமுக தலைமை சீரியசாக கண்டுகொள்ளாமல் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படியே தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என அத்தனையையும் செய்து முடித்தது திமுக தலைமை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பொதுவாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. சில இடங்களில் புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் எங்கும் மறுவாக்குப் பதிவு என்கிற நிலைமை உருவாகாமல் இருக்கிறது.
இதனிடையே சென்னையில் நேற்று குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு வாக்குப் பதிவு நிலவரம், ஒவ்வொரு மாவட்டம், மாவட்டங்களில் தொகுதிகளில் வாக்குப் பதிவு நிலவரம் ஆகியவை தொடர்பாக விவாதித்தார். ஒவ்வொரு தொகுதி வாக்குப் பதிவு சதவீதமும் எந்த அளவுக்கு திமுக வேட்பாளருக்கு சாதகம் - பாதகம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சுமார் 2 மணிநேரம் ஐபேக் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றார் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் மீண்டும் ஐபேக் அலுவலகத்துக்கு வந்தார் ஸ்டாலின். வாக்குப் பதிவு முடிவடைந்த இரவு 7 மணிவரை அங்கேயே அமர்ந்து ஆலோசனைகளை நடத்தினார் ஸ்டாலின். பிரஷாந்த் கிஷோருடனான இந்த தொடர்ச்சியான ஆலோசனை மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் பல மணிநேரம் ஐபேக் அலுவலகத்திலேயே முகாமிட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைகள் திமுகவுக்கு அரியாசனத்தை பெற்றுத் தருமா? இல்லையா? என்பது மே2-ந் தேதி தெரிந்துவிடும்.