இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான்
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்தார்.*
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை விஷூ மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி கடந்த 10-ந்தேதி மாலை திறக்கப்பட்டது.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் பம்பை வந்து, அங்குள்ள கணபதி கோவிலில் வைத்து இருமுடி கட்டினார். அங்கிருந்து நடை பயணமாக சுவாமி அய்யப்பன் சன்னிதானத்தின் வலிய நடைப்பந்தலுக்கு வந்தார்.
அங்கு அவரை திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர் எஸ்.ரவி, கமிஷனர் பி.எஸ். திருமேனி ஆகியோர் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, படி பூஜைக்கு பின், இரு முடி கட்டுடன் 18-ம் படி வழியாக சன்னிதானம் வந்த கவர்னர் சாமி தரிசனம் செய்தார். கவர்னருடன் அவரது இளைய மகன் கபீர் முகமது கானும் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் இரவு சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். நேற்று காலை மீண்டும் நெய்யபிஷேகம் நடத்தி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் சன்னிதானத்தில் மாளிகப்புரம் கோவில் அருகில் சந்தன மர கன்று ஒன்றை நட்டு வைத்தார். அதை தொடர்ந்து, கவர்னர் ஆரிப் முகமது கான் நடைபயணமாக பம்பை வந்து அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.