ஃபாஸ்டேக் கட்டண நடைமுறை வரமா...? சாபமா.....?

ஃபாஸ்டேக் கட்டண நடைமுறை வரமா...? சாபமா.....?

கடந்த மாதம் 16ந் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அதன் பயன்பாடு வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சுங்கச் சாவடிகளை கடப்பதற்கான நேரம் வெகுவாக குறைந்துள்ளதால், பல்வேறு நலன்களை வாகன ஓட்டிகள் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமாக சாலை பயன்பாட்டு கட்டணம் செலுத்தும் நடைமுறை கடந்த மாதம் 16ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதனால், ஃபாஸ்டேக் மூலமாக கட்டணம் செலுத்தும் சதவீதம் வெகுவாக அதிகரித்துள்ளது.

சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமாக 87 சதவீதம் அளவுக்கு வாகன ஓட்டிகள் பணம் செலுத்துவதாக தரவுகள் வெளியாகின. இந்த நிலையில், சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்ற இலக்கை அடைந்துவிடும்.

தமிழகத்தில் அதிக வாகனப் போக்குவரத்து மிகுந்த சுங்கச் சாவடிகளில் வார இறுதி நாட்களில் பெரும் நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையான விஷயம். குறிப்பாக, ஊர் சென்றுவிட்டு நகரத்திற்குள் நுழைவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இந்த நிலை வெகுவாக மாறி வருகிறது.

இந்த சூழலில், ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதிக போக்குவரத்து மிக்க சுங்கச் சாவடிகளில் கிட்டத்தட்ட 20 முதல் 30 நிமிடங்கள் வரை இருந்த காத்திருப்பு நேரம் தற்போது 30 நொடிகள் முதல் 1 நிமிடங்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

வாகனங்கள் வரிசை கட்டினாலும், காத்திருப்பு நேரம் என்பது மிக மிக குறைவாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையிலும் நன்மை பயப்பதாக மாறி இருக்கிறது. நெடுஞ்சாலையில் எவ்வளவு விரைவாக வந்தாலும், சுங்கச் சாவடிகளில் வந்து ஆமை போல வரிசையில் நகரந்து சென்று கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். குறிப்பாக, ஓட்டுபவருக்கு பெரும் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் கொடுத்தது.

ஆனால், தற்போது அதிகபட்சமாக ஓரிரு நிமிடங்களில் கடந்துவிடும் வாய்ப்பு கிட்டியிருப்பதால், மன அழுத்தம் குறைவதுடன், எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும். சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கடப்பதால், ஏற்படும் எரிபொருள் விரயம் தவிர்க்கப்படுவதால், ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு சேமிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.

மேலும், நாடுமுழுவதும் உள்ள 80 சதவீத சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் என்பதே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மாறி இருப்பதாகவும், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் காத்திருப்பு நேரம் என்பது ஒரு நிமிடத்திற்கு குறைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுங்கச் சாவடிகளில் வாகனங்களில் உள்ள ஃபாஸ்டேக் அட்டையின் சங்கேத குறியீட்டை கண்டுணர்ந்து கொள்வதற்கான சென்சார்கள், வாகனங்கள் மெதுவாக செல்லும்போதுதான் சரியாக அடையாளம் காணும் நிலை உள்ளது.

வெளிநாடுகளில் உள்ளது போன்று வாகனங்கள் வேகமாக சென்றாலும், ஃபாஸ்டேக் குறியீட்டு எண்ணை கண்டுணர்ந்து கொள்ளும் திறன் கொண்ட சென்சார்களை சுங்கச் சாவடிகளில் பொருத்தினால், காத்திருப்பு நேரம் என்பதே இலலாத நிலை ஏற்படும். எனினும், தற்போது ஃபாஸ்டேக் என்பது வாகன ஓட்டிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அண்மையில் மேற்கொண்ட சில நீண்ட தூர பயணங்களின்போது, ஃபாஸ்டேக் கட்டண நடைமுறை அதிக பயன் தருவதாகவே இருந்தது. 

இருந்தாலும் சில  நிறுத்தங்களில் தேவையில்லாமல் பல கவுண்டர்களை மூடி வைத்திருப்பதால் சில சமயங்களில் வாகனங்கள் செல்வதில் கால தாமதம் ஏற்படுகின்றது இதை தவிர்க்க அனைத்து கவுண்டர்களும் 24 மணி நேரமும் செயல்படும் பணியாட்களை அமர்த்த வேண்டும் என்பது ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இதை கவனிப்பாரா.....?