திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று துவக்கம் பரபரப்பு தகவல்கள்.....

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று துவக்கம் பரபரப்பு தகவல்கள்.....

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றியும் திமுகவிடம் கேட்டு பெற வேண்டிய தொகுதிகள் குறித்தும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் பங்கேற்றார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி ஆகியோர் நாளை பேச்சு நடத்தவுள்ளனர்.

TamilNadu assembly election 2021: Congress leaders discuss at Sathyamoorthy Bhavan in Chennai

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உருவான இந்தக் கூட்டணி வரும் தேர்தலிலும் தொடர்கிறது. இதுவரை தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சும் இதுவரை தொடங்கவில்லை.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.இதற்காக இன்று தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில செயல் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் காங்கிரஸுக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்கு வங்கி உள்ள தொகுதிகள், திமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இரண்டு மணிநேரம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேரில் சந்தித்துதொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக முதல்கட்ட பேச்சு நடத்துகின்றனர். அப்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

TamilNadu assembly election 2021: Congress leaders discuss at Sathyamoorthy Bhavan in Chennai

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இதுவே, 2016ஆம் ஆண்டில் 41 தொகுதிகளாக குறைந்தது. திமுக கூட்டணியில் 10 கட்சிகள் இருப்பதால் 20 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக 20 தொகுதிகள் தர முடியும் என்று கூறினாலும் 30 தொகுதிகளுக்கு குறையக் கூடாது என்று சோனியாவும், ராகுல் காந்தியும் உறுதியுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

திமுக காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மு.க ஸ்டாலினிடம் அளிக்க உள்ளனர். நாளை தொகுதி பங்கீடு முடிவடைந்த பின்னர் மீண்டும் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.