அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆலோசனை

 அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆலோசனை  சசிகலா விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.

 பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். சசிகலா ஆதரவு போஸ்டர்கள் சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையிலும் கூட சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.  சசிகலா விவகாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

சசிகலா விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை இணைந்து எடுப்பது? அதிமுக தலைமை கழகத்துக்கு சசிகலா வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது? ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு விவரம் உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் ஆலோசிக்க உள்ளனராம். இந்த ஆலோசனையின் முடிவில் அதிமுக தரப்பில் இருந்து சசிகலா தொடர்பாக ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.