அழகிரியின் அமைதிக்குப் பின்னால் நடந்தது என்ன......?

அழகிரியின் அமைதிக்குப் பின்னால் நடந்தது என்ன......?

DMK தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை அவரது அண்ணன் மு.க.அழகிரியை வைத்து ஏவ விடலாம் என பாஜக எண்ணியிருந்த நிலையில் அக்கட்சிக்கு பெப்பே காட்டிவிட்டு மயான அமைதியில் இருக்கிறார் மு.க.அழகிரி. இதன் பின்னணி குறித்து ஆராய்ந்த போது இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.

2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட அழகிரி, அக்கட்சியில் இணைய எத்தனையோ குட்டிக் கரணங்களை போட்டார். தாய் விடு தூது, தங்கை விடு தூது என எத்தனையோ தூதுகளை அனுப்பியும் கருணாநிதி மனம் மாறவில்லை.

இந்த நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு பிறகாவது திமுகவில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரை மீண்டும் கட்சியில் இணைக்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் திட்டவட்டமாக இருந்துவிட்டார்.

விமர்சனம்

இதனால் திமுகவை எதிர்க்கும் மனப்போக்கு மு.க. அழகிரியிடம் ஏற்பட்டது. தொடர்ந்து திமுகவுக்கு எதிராக விமர்சனத்தை முன் வைத்து வந்தவர், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது சட்டசபை தேர்தலில் ஸ்டாலினை இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன் என வீராவசனம் பேசினார் அழகிரி. இதனிடையே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திமுகவுக்கு அழைப்பு

அப்போது திமுகவுக்கு தான் செய்த நல்லவைகளை பட்டியலிட்டார். எனினும் அவருக்கு திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை. இதனால் கொதித்து போனார் அழகிரி. வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.. அது போல ஸ்டாலின்- அழகிரி மோதலில் குளிர் காய பாஜக முடிவு செய்தது. அதன்படி ஸ்டாலினுக்கு எதிராக மிகப் பெரிய பிரச்சார திட்டத்தை பாஜக தீட்டியிருந்தது.

டெல்லி

ஆனால் அதற்கு முன் அமித்ஷாவுடன் அழகிரியை சந்திக்க வைத்து பிரச்சார திட்டத்தை மேலும் வலுப்படுத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு அழகிரி வரவழைக்கப்பட்டார். அழகிரி எப்போது டெல்லி பறக்கலாம் என்கிறாரோ அப்போது தமிழக பாஜகவினர் செல்வதற்கேற்ப தயார் நிலையில் இருந்தனர்.

காத்திருந்து காத்திருந்து...

அழகிரியிடமிருந்து போன் வரும் போன் வரும் என காத்திருந்து காத்திருந்து தமிழக பாஜகவின் கண்கள் பூத்தது. அழகிரியும் திடீரென அநியாயத்திற்கு அமைதியாகிவிட்டார். இது குறித்து அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகையில் நீர் அடித்து நீர் விலகுமா... அதே சென்டிமென்ட்தான். அழகிரியை வைத்து பாஜகவின் மூவ் ஸ்டாலினின் காதுகளுக்கு தெரிந்துவிட்டது. தனது தாய் தயாளு அம்மாள், சகோதரி செல்வியிடம் மனக்குமுறலை கொட்டியுள்ளார் ஸ்டாலின்.

தயாளு அம்மாள்

இதையடுத்து செல்வி மூலம் கோபாலபுரம் இல்லத்திற்கு அழகிரி வரவழைக்கப்பட்டாராம். அங்கு ஸ்டாலின் வீடியோ காலில் அழகிரியை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. கட்சியில் மீண்டும் சேர்த்து பொறுப்பு வழங்குவது குறித்து பேசப்பட்டது. ஆனால் இதற்கு அழகிரி ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கு மேல் தனக்கு பொறுப்போ பதவியோ தேவையில்லை. ஆனால் மகன் தயாநிதி அழகிரிக்கு உரிய பொறுப்பும், பதவியும் வந்தாக வேண்டும் என அழகிரி கறாராக கூறிவிட்டாராம்.

தமிழக பாஜக

இவ்வளவுதானே, அட்டகாசமாக செய்துவிடலாம் என ஸ்டாலின் சொன்னதும் சிரித்த முகத்துடன், நிறைந்த இதயத்துடன் கோபாலபுரத்தை விட்டு சென்றாராம் அழகிரி. இதையடுத்து அழகிரி மவுனமாக இருந்தது தமிழக பாஜகவுக்கு எட்டியது. என்னதான் அழகிரியை நம்பி ஆற்றில் இறங்க நினைத்திருந்து ஏமாந்தாலும் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைக்கு தமிழக பாஜக வந்துவிட்டதாம்.

ஸ்டாலின்

கிடைத்ததையும் கோட்டை விட்டுவிட்டீர்களே என டெல்லியிலிருந்து செம டோஸ் விழுந்ததாம் தமிழக பாஜகவுக்கு! அழகிரியிடம் ஸ்டாலின் உறுதியளித்தது போல் முரசொலி அலுவலகத்தில் அழகிரி மகனுக்கு பொறுப்பும், ராஜ்யசபா எம்பி பதவியும் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

இவ்வளவு இருந்தாலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது இதற்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டாய் என்கிற அழகிரியின்  பேச்சு இந்த தேர்தலில் பலமாகவே எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.