முதல்வர் - ராமதாஸ் சந்திப்பு திடீர் ரத்து ஏன்?.. உள்ஒதுக்கீட்டில் சுமூக முடிவா?
முதல்வர் - ராமதாஸ் சந்திப்பு திடீர் ரத்து ஏன்?.. உள்ஒதுக்கீட்டில் சுமூக முடிவா? 



விரைவில் பாமக - அதிமுக இடையே கூட்டணி முடிவாகும் என்ற நல்ல செய்தி கிடைத்துவிடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. வழக்கமாக தேர்தல் என்றாலே, முதல் கட்சியாக பாமகவை இழுத்து உள்ளே போட்டு கொள்ளும் வேலையை அதிமுக, திமுக செய்துவிடும்.. ஆனால், இந்த முறை 2 கட்சிகளுமே பாமகவுடன் கூட்டணிக்கு தயங்கியது. இதற்கு ஒரே காரணம் இடஒதுக்கீடு விஷயத்தை டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்து வருகிறார்.. 

இந்த அளவுக்கு உறுதியாக டாக்டர் ஐயா இதற்கு முன்பு இருந்ததில்லை.. இட ஒதுக்கீடு இந்நேரம் கூட்டணி, சீட் ஒதுக்கீடு முடிவாகி பிரச்சாரத்துக்கே சென்றிருக்க வேண்டியது.. ஆனாலும், வன்னியர்கள் நலனில் தன் அக்கறையை கோரிக்கையாக விடுத்து வருகிறார்.. இதற்காக பல கட்ட போராட்டங்களையும் அறிவித்து, அதனையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் நீடிக்க இதை ஒரு நிபந்தனையாகவே பாமக வைத்திருப்பதாக தெரிகிறது. 

 பொதுவாக, தேர்தல் சமயங்களில் இதுபோன்ற இடஒதுக்கீடு விஷயத்தில் அரசு கவனம் செலுத்துமா? தீர்மானம் நிறைவேற்றப்படுமா? அது அவ்வளவு சாத்தியமா? என்பது தெரியவில்லை.. ஆனால், ஒரு சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கினால், மற்ற ஜாதியினரும் கிளம்பி விடுவார்கள் என்பது இயல்பான ஒன்றுதான்..

முக்குலத்தோர் ஜாதியினர் சும்மா இருக்க மாட்டார்கள்.. கருணாஸ் ஏற்கனவே கருணாஸ் காத்து கொண்டிருக்கிறார்.. வாய்விட்டு சொல்லியும் விட்டார்.. முக்குலத்தோர் மட்டுமல்லாமல் மற்ற ஜாதியினரும் கண்டிப்பாக கேட்பார்கள். பிரேமலதா வேறு இது சம்பந்தமாக கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார். 

அதனால்முதல்வர் எடப்பாடியார் இந்த விஷயத்தில் படு நிதானமாகவும், பக்குவமாகவும் செயல்படுகிறார். அவசரப்படாமல் ராமதாஸுடன் தொடர்ந்து பேசி வருகிறார்... அவரது இந்த நிதானம், எந்த ஜாதியையும் தான் பகைத்து கொள்ளவில்லை என்பதையே நிரூபித்து வருகிறது. அமைச்சர்கள் இதற்கு நடுவில்தான், அமைச்சர்கள் தைலாபுரத்தில் 2, 3, முறை சந்தித்து பேசினார்கள்.. ஆனாலும் உடன்பாடு எட்டப்படவில்லை..நேற்றுகூட அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.. அதனால்தான், நேற்று மாலை 4 மணியளவில், முதல்வருடன் ராமதாஸ் சந்திப்பதாக இருந்தது... 

 ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து பாமக தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மறுபடியும் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

 இதனிடையே, இன்னொரு செய்தியும் வருகிறது.. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் இருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளனரராம்.. 2012-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக சந்தானம் குழு கொடுத்த அறிக்கையின்படி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்த தகவல் உண்மையானால், வன்னியர்கள் சமூகம் நிம்மதியடையும்.. ராமதாஸின் போராட்டம் வெற்றி பெறும்.. பாமக - அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும்.. ஆனால் மற்ற சமூகத்தினரும் இதுபோலவே கிளம்ப ஆரம்பித்துவிட்டால் என்னாகும்? ஒருவேளை தேர்தலில் பிற சமுதாயத்தினரின் எதிர்ப்பு ஓட்டுக்களையும் அதிமுக அறுவடை செய்ய நேரிடுமா என்பதும் தெரியவில்லை..!