உங்கள் குறைகளை களைய நூறு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை உட்கார்ந்த இடத்திலேயே தீர்த்துக்கொள்ளலாம் தமிழக அரசின் புதிய திட்டம்
இது தகவல் தொழில்நுட்ப காலம். இணையதள வசதியின் காரணமாக உட்கார்ந்த இடத்திலேயே, உள்ளங்கைக்குள் உலகமே, வந்து விட்டது.
இணையதள சேவையை பயன்படுத்தி மக்களுக்கு அரசின் சேவைகளை கொண்டுசேர்க்க, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெட்டிசன் புராசசிங் போர்டல் (Petition Processing Portal- PPP) என்ற ஒரு இணையதளத்தை செயல்படுத்தி வருகிறது. இணையதள முகவரி, http://gdp.tn.gov.in/
பொதுவாக நாம் எந்த ஒரு துறை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும், அந்த துறையின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு கால்கடுக்க க்யூவில் நின்று மனுக்களை வழங்க வேண்டியிருக்கும். அதுவும் ஒரே நாளில் முடியக்கூடிய காரியமா என்றால் கிடையாது?
ஆபீஸர் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுவோம். அல்லது, காலதாமதம் ஆகிவிட்டது, இன்னொருநாள் வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பப்படுவார்கள்.
எத்தனையோ அவசர வேலைகளை விட்டுவிட்டு இந்த பிரச்சினைக்காக நாம் ஏன் அலைய வேண்டும், என்ற எண்ணத்திலேயே பலரும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது உண்டு.
"அழும் குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும்" என்பார்கள். ஆனால், பிரச்சினை என்னவென்று சொல்லாமல் அப்புறம் தீர்வு கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டது தான் மிச்சம். இதற்கெல்லாம் இந்த வெப்சைட் ஒரு தீர்வை கொண்டு வந்து விட்டது.
உட்கார்ந்த இடத்திலிருந்து நீங்கள் எந்த ஒரு பிரச்சனையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களின் பதிலையும் பெற முடியும் என்பது மகிழ்ச்சி செய்தி தானே. அதுவும் கூட, அனைத்து முக்கியமான துறைகளின், கோரிக்கைகளையும், மனுக்களையும் ஒரே வெப்சைட்டில் வழங்க முடியும் என்றால் பாதி பிரச்சனை தீர்ந்ததைப் போல தானே.
அட ஆமாங்க.. விவசாயத்துறையா, அதற்கு இங்கேயே தீர்வு. ஓய்வூதியதாரர்கள், முதியவர்களுக்கான பிரச்சினையா அதற்கும் தீர்வு. காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பதிவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளுக்கான கோரிக்கை மனுக்கள், இதே வெப்சைட்டில் இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, குறிப்பிட்டு, இந்த வெப்சைட்டில் மனுவை தாக்கல் செய்யலாம். ஆங்கிலத்தில் என்று கூட கிடையாது. தமிழிலேயே டைப் செய்து உங்களது குறைகளை சொல்ல முடியும். இதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து உடனுக்குடன் பதில்கள் கிடைக்கின்றன, அதுவும் தமிழ் மொழியிலேயே. இது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்.
கடந்த 2011 மே மாதம் முதல் 2014 மே வரைய முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த 10,75,743 மனுக்களில் 9,97,280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 2014 முதல் 2019 வரை முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த 16,84,813 மனுக்களில் 13,45,153 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஒரு நாளுக்கு 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குவியும் புகார்களுக்கு உடனே உடனே நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு வழக்கமாக வைத்து இருக்கிறது. பெரிய புகார்கள், தீர்க்க முடியாத சில புகார்கள் குறித்த விசாரணை மட்டும் நடந்து வருகிறது. இதில் பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் இந்த முயற்சி தமிழகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு மட்டும் இல்லாமல், பிறமாநிலங்களோ, அல்லது பிற நாடுகளிலோ வாழக்கூடிய தமிழ் மக்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழகத்தில் தங்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை அவர்கள் எங்கிருந்தாலும் புகாராக தெரிவித்து அதற்கான தீர்வையும் உடனுக்குடன் பெற முடியும்.
மனுக்கள் பெறப்பட்டது, தீர்க்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உங்களது செல்போனுக்கு எஸ்எம்எஸ் வடிவத்திலும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசின் மற்றொரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இது மட்டுமல்ல இப்போது பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய 1100 என்கிற சேவையை தொடங்கியுள்ளார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் ஒரு போட்டியில்போட்டுசீல் வைக்கப்பட்டு அவர் ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் தீர்ப்பேன் என்று கூறுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்துள்ள இந்த 1,100 திட்டத்தில் உங்கள் குறைகளை களைய ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் காத்திருக்க தேவையில்லை உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.