சசிகலா வருகை... சந்திக்கப் போகும் அந்த 3 தலைவர்கள்... திமுக 'ஷாக்'

 சசிகலா வருகை... சந்திக்கப் போகும்  அந்த 3 தலைவர்கள்... திமுக 'ஷாக்'



சென்னை வரும் சசிகலாவை கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் திமுக அணியிலுல் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதாம். 

பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள் சசிகலா தமிழகம் வருகிறார். சசிகலாவின் வருகையை முன்வைத்து அதிமுகவில் ஏகப்பட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

 அதிமுகவின் பொதுச்செயலாளரே சசிகலாதான்; அவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்கிறது சசிகலா தரப்பு. ஆனால் சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை. அவர் கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என போலீசில் அதிமுக தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

3 தலைவர்கள் சந்திக்க திட்டம்? 
இந்த நிலையில் சசிகலா பக்கம் செல்லப் போகும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் யார் யார்? என்கிற பட்டிமன்றமும் களைகட்டி இருக்கிறது. அதேநேரத்தில் சென்னை வரும் சசிகலாவை சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 அதிருப்தி தலைவர்கள் அதுவும் திமுக கூட்டணியில் உள்ள மிக முக்கியமான கட்சிகளின் 3 தலைவர்கள் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நேரத்தில் இந்த 3 கட்சிகளின் தலைவர்களின் சசிகலாவுடனான சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

திமுக நடத்திய வழக்கு 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டுதான் சசிகலா வருகிறார். அதுவும் திமுக நடத்திய வழக்கால்தான் இந்த தண்டனையே சசிகலா உள்ளிட்டோருக்கு கிடைத்தது.
தற்போது சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டணியின் 3 முக்கிய கட்சித் தலைவர்கள் சசிகலாவை சந்திக்க கூடும் என்கிற தகவல்களை திமுக தலைமை ரசிக்கவில்லையாம். சசிகலாவுடனான தலைவர்களின் இந்த சந்திப்பை தவிர்ப்பதற்கான முயற்சிகளை திமுக தரப்பு தீவிரமாக்கி உள்ளதாம்.