தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் புதிய திட்டங்கள் கோவையில் மோடி துவக்கி வைக்கிறார்

தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் புதிய திட்டங்கள் கோவையில் மோடி துவக்கி வைக்கிறார்

தேர்தல் தேதி எப்போதவேண்டுமானாலும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் பிரதமர் நரேந்திரமோடி இன்று கோவை வருகிறார். இதற்காக காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் மோடி, காலை 10.25 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் செல்கிறார்.

பின்னர் சாலை மார்க்கமாக சென்று ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் காரில் சென்று லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

புதிய திட்டங்கள்

தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.

சூரிய மின்சக்தி

இது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி அலகுகளும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது

வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதோடு, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

ஸ்மார்ட்சிட்டி

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 'ஸ்மார்ட்' நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

பொதுக்கூட்டம்

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியா வளாகத்திற்கு அருகே பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமானநிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.