அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ் விடுவிப்பு; அடுத்து அரசியல் அதிரடியா?
தமிழகத்தில் நேர்மைக்கு பெயர் போன அரசு அதிகாரி என்று பலரால் கொண்டாடப்பட்டவர் சகாயம் ஐ.ஏ.எஸ். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பணியாற்றியுள்ளார். மக்கள் பாதை என்ற அமைப்பை உருவாக்கி, தமிழகம் முழுவதும் சமூக சேவையாற்றி வருகிறார். சொத்துக் கணக்கை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற சிறப்புக்குரியவர். இவர் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். சகாயம் மீது இளைஞர்களுக்கு தனி மரியாதை உண்டு. நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
அதற்கு முன்னுதாரணமாக சகாயம் விளங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக சகாயத்தை அரசு தரப்பு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் தனது சமூக சேவையை மட்டும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இந்த சூழலில் இன்னும் மூன்று ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் சூழலில், திடீரென விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அளித்திருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்டு அரசுப் பணியிலிருந்து சகாயத்தை விடுவிப்பதாக தமிழக அரசு இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சகாயம் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிதாக அரசியல் கட்சி தொடங்கி அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான சூழல் தற்போது இல்லை.
எனவே சுயேட்சையாக அவர் போட்டியிடக்கூடும். இதேபோல் தனது ஆதரவாளர்களையும் தேர்தலில் போட்டியிட வைக்கலாம். எப்படி இருந்தாலும் சகாயத்தின் சமூக சேவை மட்டும் ஓய்வின்றி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.