திமுகவுடன் கூட்டணி உதயநிதி-கமல்ஹாசன் பேச்சு?

 

திமுகவுடன் கூட்டணி உதயநிதி-கமல்ஹாசன்  பேச்சு? 
 திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினும் கமல்ஹாசனும் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யத்துக்கு 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழ கட்சி உள்ளிட்டவைகளும் தேர்தல் களத்தில் ஆட்டத்தை தொடங்கிவிட்டன. 
தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கவும் தயார் என கூறியிருந்த கமல்ஹாசன் இன்று தமது தல்லைமையில் 3-வது அணி அமையும் என பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, கமல்ஹாசன் இடைவிடாமல் கூட்டணி குறித்து பேசி வருவது என்பதன் பின்னணியில் வேறு சில கணக்குகள் இருக்கின்றன. 
அண்மையில் திமுக கூட்டணியில் மநீம இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசியில் சில முறை கமல்ஹாசனுடன் பேசி இருக்கிறார். அதன்பின்னர் கடந்த வாரம் சென்னையில் கமல்ஹாசனும் உதயநிதியும் நேருக்கு நேர் சந்தித்து பேசியிருக்கின்றனர். 
இந்த பேச்சுவார்த்தையில் தமது மநீமவுக்கு 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கமல்ஹாசன் தரப்பு வலியுறுத்தி இருக்கிறது.  ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கே அத்தனை இடங்கள் கொடுக்க முடியாது என கூறி வருகிறோம். அதனால் மநீமவுக்கு கேட்கும் 40 தொகுதிகளையும் கொடுப்பது இயலாத ஒன்று என இந்த பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது. தொகுதி பேரம் பேசும் வியூகம் இப்படி இழுபறியாக இருப்பதால் தொகுதிகளுக்கான பேரம் பேசும் எண்ணிக்கையை வலியுறுத்தவே தமது தலைமையில் கூட்டணி; ரஜினிகாந்துடன் கூட்டணி; ஓவைசி கட்சியுடன் கூட்டணி என இடைவிடாமல் கமல்ஹாசனை மையமாக வைத்தே செய்திகள் வலம் வருகின்றன. அத்தனை திரைமறைவு பேச்சுகளும் ஒருநாள் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துதான் ஆகுமே என்கின்றன அந்த வட்டாரங்கள்.
அதேநேரத்தில் கமல்ஹாசன் தம்மை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வருகிறார். தமது அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் பேசி வருகிறார். இப்படி பேசிக் கொண்டே திமுக கூட்டணிக்கு எப்படி கமல்ஹாசன் போவார் என்கிற கேள்வியும் இன்னொரு பக்கம் முன்வைக்கப்படுகிறது.