கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் : ரஜினி சொல்லும் அளவுக்கு நடந்தது என்ன?

கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் : ரஜினி சொல்லும் அளவுக்கு  நடந்தது என்ன? ஜனவரி மாதம் கட்சி துவங்குகிறேன், டிசம்பர் 31ம் தேி அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று அறிவித்தார் ரஜினி. அறிவித்த கையோடு அவர் கட்சி துவங்கும் வேலையை துவங்கியதால் இம்முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் கட்சி வேலைக்கு நடுவே

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்தார் ரஜினி. கட்சி துவங்கும் முன்பு அண்ணாத்த பட வேலையை முடிக்க நினைத்தார் ரஜினி. அங்கு தான் ஆரம்பித்தது பிரச்சனை.

கடந்த 13ம் தேதி தனி விமானம் மூலம் ஹைதராபாத்திக்கு சென்றார் ரஜினி. அவருக்கு துணையாக மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்றார். அதன் பிறகு ஹைதராபாத்தில் நடந்த சம்பவங்கள் தான் ரஜினி தான் கட்சி துவங்கவில்லை என்று இன்று அறிவிக்க காரணம்.

ரஜினி இப்படி மாற ஹைதராபாத்தில் நடந்தது என்னவென்று பார்ப்போம். 

அரசியல் வேலையுடன் படப்பிடிப்பில் 14 மணிநேரம் வேலை செய்திருக்கிறார் ரஜினி. 70 வயதாவதை அவர் மனதில் வைக்காமல் கூடுதல் நேரம் உழைத்தார்.

அந்த களைப்பில் இருந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் உதவியாளர் உள்பட படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டிகளை போன்று bio bubble முறையை பயன்படுத்தியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்கிற நம்பிக்கையில் தான் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால் அப்படியும் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.


கீர்த்தி சுரேஷேுடன் சேர்ந்து நடித்ததால் அவர் மூலம் தனக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்று ரஜினி கவலை அடைந்தார். இதையடுத்து அவர் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். களைப்பு, கவலை, பதட்டம், தனிமை ஆகியவற்றால் அவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பயப்படுபம்படி ஒன்றும் இல்லை ஆனால் ரத்த அழுத்தம் மட்டும் சீராகாமல் உள்ளது என்றார்கள். ஒரு வழியாக ரத்த அழுத்தம் சீரானதும் ஞாயிற்றுக்கிழை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சாக்ஜ் ஆன வேகத்தில் சென்னை திரும்பினார்.


டிஸ்சார்ஜ் செய்தாலும் வீட்டில் பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும், டென்ஷன், ஸ்ட்ரெஸ் கூடவே கூடாது, கொரோனா பாதிப்பு ஏற்படும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவே கூடாது என்று மருத்துவர்கள் கறாராக கூறிவிட்டனர். அரசியலுக்கு வந்தால் மருத்துவர்கள் சொல்படி நடக்க வாய்ப்பே இல்லை.


வீட்டில் இருந்து கொண்டே கட்சி நடத்தி, தேர்தலில் போட்டியிட முடியாது. மக்களை சந்திக்க வெளியே சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பிரச்சனையாகிவிடும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் எந்த பிரச்சனையும் வராது என்று நம்பி தான் சென்றார் ரஜினி. ஆனால் அங்கு பிரச்சனையாகி அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். ஒரு வேளை அவர் ஹைதராபாத் செல்லாமல் இருந்திருந்தால் கட்சி துவங்கியிருப்பாரோ என்னவோ?

ஹைதராபாத்தில் நடந்த உடல்நலக் கோளாறு தான் காரணம் என்று பலரும் சொல்கிறார்கள்  இது ஒருபுறம் உண்மை என்று சொன்னாலும் இன்னும் ஒரு அழுத்தமான காரணம் உள்ளது அதை நாளை பார்க்கலாம்......