சன் டிவிக்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!

சன் டிவிக்கு எதிராக கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்! திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவியில் அதிமுகவின் தேர்தல் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் குரலாக ஒலித்தது சன் டிவி. ஆனால் கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

அதன்பின்னர் இரு குடும்பங்களும் இணைந்தன. ஆனால் திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தொலைக்காட்சி எனும் கருத்தை மாற்றும் விதமாக சன் டிவி செயல்பட்டு வந்தது. தற்போது அது அதிமுகவுக்கு ஆதரவான விளம்பரங்களையும் ஒளிபரப்பி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்புகிறது.
இதற்கு திமுக உடன்பிறப்புகள் சமூக வலைதலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தர்மபுரி மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இன்று டிசம்பர் 31 தனது பேஸ்புக் பதிவில், "சேற்றில் ஒரு கால் , ஆற்றில் ஒரு கால்" என்ற தலைப்பிட்டு இது குறித்து எழுதியுள்ளார்.
"சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக் கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்" என்று செந்தில்குமார் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.