வேலூர் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் இந்தரநாத்மீது குற்றவியல் நடவடிக்கை பாய்கிறது


இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் (இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி) வேலூர் மாவட்டக் கிளையில், பெருமளவிலான நிதி முறைகேடாகக் கையாடல் செய்யப்பட்டிருப்பது, தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் நிர்வாகக்குழுவை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டுள்ளார், ரெட்கிராஸ் சொசைட்டியின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம். ரெட்கிராஸ் செயலாளர் பொறுப்பை வகித்துவந்த இந்தர்நாத் என்பவரால்தான் இந்த அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ரெட்கிராஸ் அலுவலகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்
கணக்குகளை சரியாகப் பராமரிக்காமல் பணத்தை கையாடல் செய்திருப்பதாகவும் இந்தர்நாத்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. செயலாளர் இந்தரநாத்திடமும், நிர்வாகக்குழுவில் இடம்பெற்றுள்ள 14 உறுப்பினர்களிடமும் ஆட்சியர் சண்முகசுந்தரம் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். சப்-கலெக்டர் கணேஷ் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரெட்கிராஸ் சொசைட்டியின் அலுவலகத்துக்கு சப்-கலெக்டர் ‘கணேஷ் சீல்’ வைத்தார்.

செயலாளர் இந்தர்நாத் பயன்படுத்திவந்த ரெட்கிராஸின் காரையும் பறிமுதல் செய்து அவரிடமிருந்து சாவியையும் கைப்பற்றியுள்ளனர். நிதி முறைகேடு தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையை விரைவாக முடித்து நிர்வாகக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, செயலாளராக இருந்த இந்தர்நாத் செய்த மோசடிகளை கணக்கெடுத்து அதற்கான கோப்புகளை கைப்பற்றவும் சப்-கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
ரெட்கிராஸ் செயலாளர் இந்தர்நாத்
ரெட்கிராஸ் செயலாளர் இந்தர்நாத்
இதுகுறித்து, சப்-கலெக்டர் கணேஷிடம் கேட்டபோது, ‘‘சேவை நோக்கத்துடன் செயல்படும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தேசிய தலைவராக ஜனாதிபதியும், மாநிலத் தலைவராக கவர்னரும், மாவட்டத் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் நிர்வாகம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் அமைப்பில் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கலைக்கப்பட்ட நிர்வாகக்குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையை விரைவாக முடித்து அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்’’ என்றார். இந்த முறைக்கேடு களின் காரணக்கர்த்தா இந்தரநாத்து தான் வேலூர் கொசப்பேட்டையில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.