ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்

 ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்





அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்படி இரு கட்சியினரும் சொல்லிய பின்பும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயல் எனச் சொல்லி இருக்கிறார்.




டிரம்ப் நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால் பல மக்கள் இறக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார் ஜோ பைடன்.




ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும் , சமூக வலைதளத்தில் "இது விளையாட்டு அல்ல" எனச் சொல்லி இருக்கிறார்.




ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார். இது வெற்றிக்குத் தேவையான 270 இடங்களை விட அதிகம்.




இருப்பினும் டிரம்ப், நேற்று (திங்கட்கிழமை) "நான் தேர்தலில் வெற்றி பெற்றேன்" என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.




03 நவம்பர் 2020 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, டிரம்ப் தரப்பினர், பல்வேறு வழக்குகளைத் தொடுத்து இருக்கிறார்கள்.




General Services Administration (GSA) என்று அழைக்கப்படும் ஓர் அரசு அமைப்பு, புதிய அதிபர் பொறுப்பேற்றுக் கொள்ளத் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.




ஆனால் டிரம்பால் நியமிக்கப்பட்டவர் தலைமையில் இயங்கும் இந்த அமைப்போ, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதனால், பைடன் தரப்பில் உள்ளவர்களுக்கு அரசின் முக்கியமான விவரங்கள் கிடைக்காமல் போகும். வழக்கமாக, இது போன்ற முக்கிய விவரங்கள், புதிதாக வர இருக்கும் நிர்வாகத்துக்கு வழங்கப்படும்.




பைடனுக்கு நெருக்கமானவர்களோ, ஆட்சி அதிகாரத்தி கைமாற்ற டிரம்ப் மறுப்பது, பைடனின் அணியை, கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பதற்கான திட்டமிடுதலில் இருந்து விலக்கி வைப்பதாக பொருள்படும் என்கிறார்கள்.




ஜோ பைடன் என்ன சொன்னார்?




"யாருக்காவது இது புரிகிறதா? இது உண்மையிலேயே பல உயிர்களை காப்பாற்றுவது தொடர்பானது, இது மிகைப்படுத்தப்பட்டது அல்ல என, திங்கட்கிழமை அன்று பேசினார் பைடன். நாம் ஒத்துழைக்கவில்லை என்றால், பல மக்கள் இறந்து போகலாம்," என்றார்.




"அமெரிக்கா முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது, மிகப் பெரிய வேலை. என் தரப்பினர்கள் 20 ஜனவரி (அதிபர் பதவி ஏற்பு) வரை காத்திருக்க வேண்டும் என்றால், நாங்கள் 1 - 1.5 மாதம் பின் தங்கிவிடுவோம்," எனச் சொல்லி இருக்கிறார் பைடன்.




நீங்கள், மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லி, மாகாண அரசுகளின் தலைவர்களை உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா என்று கேட்டதற்கு, நான் முகக் கவசம் அணிவதை ஊக்குவிக்கச் சொல்வேன் என்றார் பைடன்.




திங்கட்கிழமை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன், "தொழில் முறை நேர்த்தியுடன் " அடுத்த அரசுக்கு அதிகார மாற்றங்கள் நடக்கும் என்று பேசினார். இது, மைக் பாம்பேயோ பேசியதில் இருந்து மாறுபட்டு இருந்தது. பாம்பேயோ (ஆட்சி அதிகாரம் ஏற்கப்பபோவது) இரண்டாவது டிரம்ப் நிர்வாகம், என கடந்த வாரம் பேசினார்.




வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஜூட் டெரெவிடம் பிரையனின் பேச்சு குறித்தும், அதிகார மாற்றத்தில் அவரின் பங்கு குறித்தும் நான் கேட்ட போது, ஜூட் அதை மறுக்கிறார். இந்த நேரத்தில் அதிகார மாற்றம் எல்லாம் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்.




ஜூட் குறிப்பிட்ட விஷயங்கள், பாம்பேயோ பேசியதை வலுப்படுத்துவதாக இருக்கிறது, ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பேச்சுக்கு முரணாக இருக்கிறது. இவர்களின் தலைவரே முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்.




டிரம்ப், திடீரென பைடன் வெற்றி பெற்றதாக ட்வீட் செய்தார். பின் அவரே தன் வார்த்தைகளில் இருந்து பின் வாங்கிக் கொண்டார். டிரம்பின் கேபினெட் செயலர், ஆலோசகர் & மற்றவர்கள் டிரம்பின் இந்த முரணான அணுகுமுறையை பிரதிபலிக்கிறார்கள்.




டிரம்பின் சட்ட போராட்டங்கள் எப்படி போய்க் கொண்டு இருக்கின்றன





குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், மிஷிகன், ஜோர்ஜா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து, தொடுத்த வழக்குகளை, நேற்று (திங்கட்கிழமை) கைவிட்டு இருக்கிறார்கள்.




வழக்குகளை கைவிட்டதற்கு, எந்த காரணமும் சொல்லப்படவில்லை. எல்லா வழக்குகளும் வாக்காளர்களால் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை டிரம்பின் பிரசாரக் குழுவோ, குடியரசுக் கட்சி நிர்வாகிகளாலோ தொடுக்கப்படவில்லை.




விஸ்கான்சினில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றால், டிரம்பின் பிரசாரக் குழுவினர், 8 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என நேற்று (திங்கட்கிழமை) விஸ்கான்சின் தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. இந்த மாகாணத்தில் பைடன் 20,000 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி வாகை சூடி இருக்கிறார்.




ஜோர்ஜா மாகாணத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது, டிரம்புக்கு ஆதரவான கவுண்டியில் 2,600 வாக்குகள் எண்ணப்படவில்லை என ஜோர்ஜாவின் அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். இது டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.




ஒரு தனி நபர் தன் வேலையை சரியாகச் செய்யாததால், இந்த வாக்குகள் கவனிக்கப்படாமல் போய்விட்டது என ஜோர்ஜா மாகாணத்தின் தேர்தல் அதிகாரி கேப்ரியல் ஸ்டெர்லிங் சொல்லி இருக்கிறார்.




இந்த வாக்குகளை எண்ணினாலும், டிரம்பின் வாக்கு எண்ணிக்கை 800-தான் அதிகரிக்கும். 14,000 வாக்கு வித்தியாசம் வைத்திருக்கும் பைடனை தோற்கடிக்க, இது போதாது.




வெறும் 0.3% வாக்கு வித்தியாசம் இருப்பதால், ஜோர்ஜா மாகாணம் முழுக்க, மறுவாக்கு எண்ணிக்கையை நடந்துகொண்டு இருக்கிறது.




இதற்கிடையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த, டிரம்புக்கு நெருக்கமான, தெற்கு கரோலினாவின் செனட்டர் லிண்ட்சே க்ரஹாம், சில கவுண்டிகளில் பதிவான வாக்குகளை ரத்து செய்யச் சொல்லி, தனக்கு அழுத்தம் கொடுப்பதாக சிஎன்என் ஊடகத்திடம் சொல்லி இருக்கிறார், ஜோர்ஜாவில் வாக்கு மறு எண்ணிக்கையை மேற்பாற்வையிடும் அந்த மாகாண அரசின் செயலர் பிராட் ராஃபென்ஸ்பெர்ஜர். இதை க்ரஹாம் மறுத்து இருக்கிறார்.




அதோடு தங்கள் இருவருக்கும் இடையில், கையெழுத்து சரிபார்ப்பு நடவடிக்கையின் போது, நல்ல முறையிலான பேச்சுவார்தைகள் அதிகம் நடக்கவில்லை என பொலிடிகோ என்கிற பத்திரிகையிடம் சொல்லி இருக்கிறார்.


என்ன சொன்னார் மிஷெல் ஒபாமா?




மிஷெல் ஒபாமா, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரம்பை விமர்சித்து இருக்கிறார்.




நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவரைப் பற்றி, இன ரீதியிலான பொய்களைப் பரப்பினார். அது என் குடும்பத்தை ஆபத்தில் தள்ளியது. பராக் ஒபாமாவின் பிறப்பிடத்தைப் பற்றி, பொய்யான விஷயங்களைச் சொன்னார். அதற்குப் பின் , டிரம்பை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் இருந்த சிரமங்களை விவரித்து இருக்கிறார்.




எங்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை என்றால் கூட அல்லது இது வேறு மாதிரி நடந்து இருக்கலாம் என நினைத்தாலும் கூட, எங்களுக்கு நாட்டின் மீதான அன்பினால், தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. நாட்டின் அதிபர் பதவி, எந்த ஒரு தனி நபருக்கோ, எந்த ஒரு தனி கட்சிக்கோ சொந்தமானது அல்ல எனச் சொல்லி இருக்கிறார் மிஷெல் ஒபாமா.




தனிப்பட்ட ஒருவரின் நலனுக்காகவோ, அரசியல் லாபத்துக்காகவோ, ஆதாரமில்லாத சதிக் கோட்பாடுகளைச் சொல்லிக் கொண்டு இருப்பது, நம் நாட்டி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளிவிடும். இது விளையாட்டல்ல எனச் சொல்லி இருக்கிறார் மிஷெல் ஒபாமா.




தேர்தல் நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளவும், நல்ல முறையில் அதிகாரம் கைமாறுவதையும் ஊக்குவிக்க, அமெரிக்கர்கள், குறிப்பாக, கட்சி பாகுபாடின்றி அனைத்து தேசியத் தலைவர்களையும் அழைத்து இருக்கிறார் மிஷெல்.




அமெரிக்க மக்கள் தேர்தல் வழியாகப் பேசி இருக்கிறார்கள். அமெரிக்க அதிபரின் மிகப் பெரிய பொறுப்பு, அமெரிக்கர்களின் குரலைக் கேட்பது எனச் சொல்லி இருக்கிறார் மிஷெல் ஒபாமா.