மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்
கல்வி தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் எந்தவிதமான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்து கொள்ள கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு 24 மணி நேர இலவச வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டது. 14417 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து மாணவர்கள் விளக்கங்களைப் பெறலாம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. பெரும்பாலும் கல்வி உதவித்தொகை, மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக இந்த மையத்துக்கு அழைப்புகள் வருவது வழக்கம்.
இதனிடையே, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகாரளிக்க 14417 என்ற உதவி மைய எண்ணை அணுகலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புகார்கள் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வு மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதலும் இந்த எண்ணில் தொடர்புகொண்டால் கிடைக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.