விடைத்தாள் திருத்தும் முதுகலை ஆசிரியப்பெருமக்களே !

 விடைத்தாள் திருத்தும்

முதுகலை ஆசிரியப்பெருமக்களே !


விடைத்தாள் திருத்தும்

வாய்ப்பைப் பெற்ற

மன்னிக்கவும்-

வரத்தைப்பெற்ற

முதுகலை ஆசிரியப்பெருமக்களே !


இது பணி அல்ல

பயணம்


கவனமுடனும்

கண்ணியத்துடனும்

நடந்து செல்ல வேண்டிய

நடை பயணம்.


உங்கள்

கரங்களில்

விடைத்தாள் அல்ல...

அது ஒரு

குழந்தையின் 

வாழ்க்கைத்தாள்...


பேனாவில்

சிவப்பு மை

மனதில்

நேர் மை

புத்தியில்

உண் மை

நிரப்பி

திருத்தம் செய்யத்தொடங்குங்கள்.


பள்ளியில்தான்

நீங்கள் ஆசிரியர்கள்

விடைத்தாள் திருத்தும்

முகாமில்

நியாயமான  தீர்ப்பு எழுதும்

நீதிபதிகள்.


மதிப்பெண்ணை

கிள்ளி  போடாதீர்கள்

அந்த மாணவன் பாதிக்கப்படுவான்


அள்ளிப் போடாதீர்

அடுத்த மாணவன்

பாதிக்கப்படுவான்


சரியாக

மதிப்பிடுங்கள்

சந்ததிக்கே

பாதிப்பில்லை...


செல்போனில்

பேசியபடி

வாகனம் ஓட்டுவது

ஆபத்து.


செல்போனில்

பேசிபடி

விடைத்தாள் திருத்துவது

பேராபத்து..


நண்பர்களோடு

பேசியபடி

திருத்தப்பட்ட

விடைத்தாள்

நாளை

ஊடகங்களில்

பேசு பொருளாகக்கூடும்.


தவறுகளை

தவிருங்கள்...


ஒரு முறை

சரி பாருங்கள்

நிறைகள் தெரியும்


இரு முறை

சரி பாருங்கள்

குறைகள் தெரியும்


பாடுபட்டு திருத்தினாலும்

பாவம்தான்

வந்து சேரும்


ஈடுபாட்டோடு

திருத்தினால் தான்

மனம் குளிர்ந்து

போகும்.


அவசரத்தை

அடகு வைத்திடுங்கள்


நிதானத்தை

கையிலெடுங்கள்


பக்கத்தில் இருப்பவர்

திருத்திவிட்டார் என்ற

பொறாமை கொள்ளாமல்...

பக்கத்தை விடாமல்

திருத்திடும்

பொறுமை கொள்ளுங்கள்.


முதன்மைத் தேர்வாளருக்கு

மதிப்பளியுங்கள்

அவரின்

வழியில்

மதிப்பீடு செய்யுங்கள்


முகாம் முழுவதும்

உங்கள்

முகம் தெரியட்டும்


உள மகிழ்ச்சியோடும்

உடல்

ஆரோக்கியத்தோடும்

திருத்துங்கள்...


ஆசிரியர்கள் மீதான

அகோரப்பார்வையிலிருந்து

ஊடகங்களும்

சமூகமும்

விலகிச்செல்ல

இந்த 

விடைத்தாள் திருத்தும் முகாம்

சிறப்பாக

அமைய வாழ்த்துகள்.