குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை...!?
இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் வீதம் இருக்க வேண்டும். அதேபோன்று ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு வகுப்பிற்கு 35 மாணவர்கள் இருக்க வேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் வகுப்பிற்கு 40 மாணவர்கள் வீதம் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் பார்த்தால் தொடக்கப் பள்ளிகளில் 150 மாணவர்களும் நடுநிலைப் பள்ளிகளில் 255 மாணவர்களும் இருக்க வேண்டும்.
ஆனால் பெரும்பான்மையான தொடக்க பள்ளிகளில் 150 மாணவர்கள் படிக்க வேண்டிய இடத்தில் மூன்று முதல் 15 மாணவர்கள் வரை இரண்டு சதவீதத்தில் இருந்து பத்து சதவீதத்திற்குள் இருக்கிறார்கள். அதுவும் ஒரு சில வகுப்புகளில் சுத்தமாக மாணவர்கள் இருப்பதே இல்லை.
அதேபோன்று நடுநிலைப் பள்ளிகளில் 255க்கு 30 முதல் 50 வரை மட்டுமே மாணவர் எண்ணிக்கை இருக்கின்றது. 15 முதல் 25 சதவீதம் அளவிலேயே மாணவர்கள் வருகை தருகிறார்கள்.
எனவே இந்தப் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிப்பதும் பள்ளிகளை நிர்வகிப்பதும் பெரும் சிக்கலாக இருக்கிறது. எனவே இத்தகைய பள்ளிகளை அருகில் இருக்கிற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வருகின்ற 93 தொடக்கப்பள்ளிகளில் 32 பள்ளிகளும் 22 நடுநிலைப்பள்ளிகளில் ஒன்பது பள்ளிகளும் மொத்தம் 41 பள்ளிகள் அருகில் இருக்கின்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதற்கான கருத்துருக்கள் தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் இருந்தும் கருத்துருக்கள் கோரப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆசிரியர்கள் பணி நிரவல் செய்வதற்கும் புதிய பணியிடங்கள் உருவாக்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டு வருகின்றது.
மாணவர்களை தரமாக தயாரிப்பதற்கு போதுமான வளங்களை உருவாக்குவது அவசியம் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அங்கம் தான் பள்ளிகள் இணைப்பும் பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படுவதும்.
இதற்கான முயற்சிகளை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வருகிறது. இதுவரை தமிழக அரசுதான் இதில் சுணக்கம் காட்டி வந்தது.
இதற்கு சில ஜால்ராக்கள் என் காமராஜர் திறந்த பள்ளியை, என் கலைஞர் கருணாநிதி திறந்த பள்ளியை எப்படி மூடலாம் இன்று பிரச்சினையை மடைமாற்றி மக்களை ஏமாற்றி வந்தனர்.
ஒரு சில மாணவர்களுக்காக ஒரு பள்ளியை நடத்துவதால் அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது எனவே இத்தகைய பள்ளிகளை மூடிவிட்டு அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க வேண்டும்.
அல்லது அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அப்படி சேர்ப்பதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் அதில் படிக்கின்ற ஒரு சில மாணவர்களுக்காக அரசு இலட்சக்கணக்கில் செலவிடுகின்ற நிலை மாற்றப்பட்டு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிடைக்கும் என்று அப்போதே நாம் மக்களாட்சி மற்றும் மெட்ரிகுலேஷன் நியூஸ் இதழ்களில் எழுதினோம்.
அப்போது அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் அரசுக்கு எத்தனையோ கோடிகள் மிச்சமாகி இருக்கும். மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைத்திருக்கும். தற்போது அரசு இந்த நடவடிக்கை எடுப்பது வரவேற்க தகுந்ததாகும்.
இருந்தாலும் இதற்கும் வேட்டு வைக்கின்ற வகையிலே சில ஆசிரியர்கள் தங்களின் சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக 13 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடி விடுவார்கள் என்பதால் அந்த கிராமத்தில் உள்ள பெற்றோர்களை மூளை சலவை செய்து தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டுள்ளனர்.
அருகில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணைத்து விட்டால் தினமும் பள்ளிக்குப் போக வேண்டும், வேலை செய்ய வேண்டும், பாடம் நடத்த வேண்டும், தண்ட சம்பளம் வாங்க முடியாது என்பதால் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை வைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அரசு இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் வேண்டுகின்றனர்.