யார் சிறந்த முதல்வர்கள்....?!
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் நாட்டில் பெஸ்ட் முதல்வர் யார் என்பது குறித்த லிஸ்டையும் வெளியிட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிஜிட்டல் உலகில் புதிய மைல்கல்லை எட்டினார். அதாவது எக்ஸ் தளத்தில் இப்போது அதிக பாலோயர்ஸ்களை கொண்ட ஆக்டிவ் அரசியல்வாதிகள் மோடி மற்றும் அமித் ஷா முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் பிறகு மூன்றாவது இடத்திற்கு யோகி ஆதித்யநாத் வந்துள்ளார். அதேபோல அவரது செல்வாக்கு என்பது சமூக வலைத்தளங்களுடன் நின்றுவிடவில்லை.
இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பில் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். நாட்டின் சிறந்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு சுமார் 46.3% பேர் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆக. மாதம் நடந்த இதே சர்வேயில் யோகி ஆத்தியநாத்திற்கு 43% ஆதரவு இருந்த நிலையில், இப்போது அது 46%ஆக மேலும் அதிகரித்துள்ளது. அவருக்கும் அடுத்த இடத்தில் உள்ள கெஜ்ரிவாலுக்கும் உள்ள இடைவெளி தான் அவரது ஆதிக்கத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
அடுத்தடுத்த இடங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடம் பிடித்தாலும் 19.6 சதவீதம் பேர் மட்டுமே அவரை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து மம்தா 8.4% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், 5.5% ஆதரவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 4ஆவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து நவீன் பட்நாயக் (3%), சித்தராமையா (2.3%) , ஹிமந்த பிஸ்வா சர்மா (2.2%, ஏக்நாத் ஷிண்டே (2%), உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி (0.5%), குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் (0.4%) ஆகியோர் இடங்களைப் பிடித்துள்ளனர்.
இது ஒட்டுமொத்தமாக நாடு முழுக்க யார் பெஸ்ட் முதல்வர் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதிலாகும். அதேநேரம் தங்கள் சொந்த மாநிலங்களில் எந்த முதல்வருக்குச் செல்வாக்கு அதிகம் என்ற கேள்விக்குக் கிடைத்த பதில் சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது. அதில் 52.7% ஆதரவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் டாப் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் (51.3%), ஹிமந்த பிஸ்வா சர்மா (48.6%) ஆகியோர் டாப் 3 இடங்களில் உள்ளனர்,
குஜராத்தின் பூபேந்திர சிங் (42.6%), திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா (41.4%), கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் (40.1%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நாட்டில் பெஸ்ட் முதல்வர் லிஸ்டில் 2ஆவது இடத்தில் இருந்த கெஜ்ரிவால் இதில் 8ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு 36.5% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 35.8% ஆதரவுடனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா 32.% ஆதரவுடனும் டாப் 10இல் வருகிறார்கள்