இண்டி கூட்டணி கூட்டத்தில் ஸ்டாலின்: அண்ணாமலை கடுமையான விமர்சனம்

 இண்டி கூட்டணி கூட்டத்தில்  ஸ்டாலின்: அண்ணாமலை, ஜெயக்குமார் கடுமையான விமர்சனம்....

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இண்டியா கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லிக்குச் சென்றிருக்கிறார் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.

தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இண்டியா கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லிக்குச் சென்றிருக்கிறார். ரோம் நகரம்  பற்றி  எரிந்து கொண்டிருந்த போது  நீரோ மன்னன்  பிடில் வாசித்துக்  கொண்டிருந்தது போல்  தமிழக மக்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது அதைப் பற்றி எல்லாம்   துளியும் கவலையில்லாமல்  பதவி சுகத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் என்று  அண்ணாமலை கூறினார்.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகும், அந்தந்த மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னும் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்ய தவறிவிட்டது. சென்னை மழையில் இருந்து அரசு பாடம் கற்க தவறிவிட்டது, எனக் கூறினார்.

முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் மீது அக்கறை கொண்டு முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை எனவும், இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு செல்லும் வேளையில் போகிற போக்கில் பிரதமரை சந்திக்கிறார். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், என பதிலளித்தார்.