*ஓசூரில் தேசியக் கொடியுடன் அமைதி பேரணி நடத்த முயன்ற பிஜேபியினர் போலீஸாரால் கைது.*
நாளை நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பணி முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில், ஓசூர், ராம் நகர், அண்ணா சிலையிலிருந்து மீரா மஹால் வரை கட்சியினர் தேசிய கொடியை ஏந்தியவாறு அமைதி பேரணி நடத்துவதற்காக திட்டமிட்டு, அதற்காக அனுமதி கோரி போலீஸாரிடம் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பிஜேபியினர் தேசியக்கொடியுடன் அணிவகுத்து நின்று பேரணியாக புறப்பட தயாராகி இருந்தனர்.
பிஜேபியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ் தலைமையில் நடைபெறுவதாக இருந்த இந்த பேரணியில் முன்னதாக அவர் பேசினார்.
அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் பிஜேபியினர் பேரணி நடத்த முயன்றதால் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பிஜேபி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனுமதி இல்லாத பட்சத்தில் மீறி பேரணி நடத்தினால் அவர்களை கைது செய்வதற்கு ஏதுவாக இரண்டு பேருந்துகளையும் தயார் நிலையில் போலீசார் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் டிஎஸ்பி பாபு பிரசாத் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் எம் நாகராஜ் ஆகியோரிடையே சிறிது நேரம் காரசார பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் பிஜேபினர் பேரணி நடத்துவதை கைவிட்டு விட்டு தங்கள் கலைந்து செல்வதாக கூறினார்கள்.
மேலும் கட்சியின் சார்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு தாங்கள் மீரா மஹால் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதால் தங்களை போலீசார் கைது செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளிலேயே அழைத்துச் சென்று விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும், இதனை ஏற்றுக் கொண்டதாக கூறிய போலீசார் தேசிய கொடியுடன் இருந்த பிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்து இரண்டு பேருந்துகளிலும் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.