மூளை சாவு அடைந்தவர்கள் வாயிலாக மாற்று உடல் உறுப்புகளை பொருத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
*மூளை சாவு அடைந்தவர்கள் வாயிலாக மாற்று உடல் உறுப்புகளை பொருத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது - ஓசூர் தனியார் மருத்துவமனை இயக்குனர் பெருமிதம்.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான காவேரி மருத்துவமனை சார்பில் சர்வதேச உடல் உறுப்பு தான தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி சர்வதேச உடல் உறுப்பு தான தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூரில் இயங்கி வரும் காவேரி மருத்துவமனை சார்பில் கடந்த 13 ஆம் தேதி முதல் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தனியார் அரங்கில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களும் அதனைப் பொருத்திக் கொண்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அப்போது உடல் உறுப்பு தானத்தின் உடைய அவசியம் குறித்தும், மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் வாயிலாக இறந்தவர்கள், பொருத்திக் கொண்டவர்கள் வடிவில் உயிரோடு வாழ்கிறார்கள் என்பது வலியுறுத்தப்பட்டது.
இதனை விளக்கும் விதமாக மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் நாடகத்தின் வாயிலாக தத்ரூபமாக நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக உடல் உறுப்பு தானம் செய்வதும், அதனை மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தி பெரும்பாலானவர்கள் நல்ல உடல் நிலையில் வாழ்வதும் குறித்து விளக்கங்களை எடுத்துரைத்தனர்.
பின்னர் மூளைச் சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர் மற்றும் பல்வேறு உறுப்பு தானங்களை செய்தவர்களுக்கு ஓசூர் சப் கலெக்டர் திருமதி சரண்யா கேடயம் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து வந்திருந்த அனைவரும் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை இயக்குனர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில்,
மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை, மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்துவதில் தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடத்திலும், அதேபோல மூலை சாவு அடைந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதும், மூளை சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களாக முன்வந்து உறுப்புகளை தானம் செய்வதனால் நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்படுவது என்ற மனநிலை தான் காரணமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.