சந்திரயான் -3 வெற்றி.. " நேரு" போட்ட விதை ...? பந்தா காட்டும் காங்கிரஸ்!
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவம் அருகே கால் பதித்து சரித்திரம் படைத்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவம் அருகே கால் பதித்தது. உலகிலேயே நிலவின் தென் துருவம் அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த சரித்திர சாதனையை கொண்டாடி மகிழ்கிறது.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியபோது கட்சி பேதமின்றி அனைவரும் கொண்டாடினர். டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்திலும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் களைகட்டியது.
சமூக வலைதளங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனை சந்திரயான் 3 வெற்றி என பாஜகவினர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி தமது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் முதல் பிரதமர் நேரு காலம் முதல் காங்கிரஸ் ஆட்சிகளில் விண்வெளித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள்: 1962-ல் இஸ்ரோவுக்கு முன்னோடி அமைப்பான INCOSPAR நிறுவனம் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது. 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ல் விண்வெளிக்கு ராகேஷ் சர்மா என்ற இந்தியரை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்தது இந்தியா. சந்திரயான்-1 விண்கலமானது 2008-ல் காங்கிரஸ் ஆட்சியில் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில், 1962-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழு உருவாக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் விண்வெளிப் பயணம் தொடங்கியது. இக்குழுவை அமைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்ட விஞ்ஞானிகள் ஹோமிபாபா, விக்ரம் சாராபாய் ஆகியோருக்கும் அவர்களுக்கு உறுதுணையாக ஆதரவாக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினருக்கு தங்களின் கட்சியின் பெருமைகளை சொல்லி கொண்டாடுவதற்கு வேறு ஒன்றுமே இல்லை.
எங்கே இதன் மூலம் மோடி உலகத் தலைவராகி விடுவாரோ என்கிற பொறாமையில், இந்த சாதனை மோடியை மீண்டும் இந்திய பிரதமர் ஆக்கிவிடும் என்கிற பயத்தால் காங்கிரஸ் கட்சியினர் இப்படி எல்லாம் பிதற்றி வருகின்றனர். இது என்ன அரசியலோ தெரியவில்லை...?
என்னதான் காங்கிரஸ் கட்சியினர் தலை குப்புற விழுந்து புரண்டாலும் மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவதை எந்த சக்தியாகும் தடுக்க முடியாது என்று பா.ஜ.க.வினர் மட்டுமல்ல... உண்மையான இந்திய தேச பக்தர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்