சொந்த வாகனங்கள் பள்ளிக்கு வாடகைக்கு இயக்கம் ஓமலூரில் 5 வாகனங்கள் பறிமுதல்

சொந்த வாகனங்கள் பள்ளிக்கு வாடகைக்கு இயக்கம் ஓமலூரில் 5 வாகனங்கள் பறிமுதல்


 ஓமலூர் காடையாம் பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகளை அழைத்து செல்வதற்காக தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலர் சொந்த பயன்பாட்டுக்கு உரிய வாகனங்களை வாடகைக்கு இயக்கியதாக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதாவுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் நேற்று அவர் அதிரடி ஆய்வு செய்தார். அப்போது ஓமலூர் அரசு உதவி பெறும் பள்ளியின் முன்பு குழந்தைகளை சொந்த வாகனத்தில் ஏற்றிய 5 வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த வாகனங்களை அவர் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாகனங்களில் இருந்த பள்ளிக் குழந்தைகளை வாடகை வாகனத்தை வரவழைத்து பத்திரமாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா கூறியதாவது:-

வாடகைக்கு என தனியாக டீ போர்டு வாகனங்கள் உள்ளன. இவர்கள் தனியாக வரி செலுத்தி வாடகைக்கு ஓட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சொந்தத் திற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தை வாடகைக்கு சிலர் ஓட்டுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய்த போது 5 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளோம். மேலும் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். சொந்த பயன்பாட்டுக்காக உள்ள வாகனத்தை வாடகைக்கு விட்டால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படுவ தோடு அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.

இத்தகைய வாகனங் களால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதில் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்தப் பயன்களும் பெற முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வாடகை வாகனத்தை பயன்படுத்தி அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.